Published:Updated:

கிராம அக்கறை!

பசுமை வணக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை வணக்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு!’’ என்று தன் இறுதிக்காலம் வரை சொல்லி வந்த மகாத்மா காந்தியின் பிறந்தநாள் சிறப்புகளில் ஒன்று ‘கிராம சபை’ கூட்டங்கள். அதையே ரத்துச் செய்து அதிர்ச்சிக் கொடுத்துள்ளது தமிழக அரசு.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, கொரோனா காரணமாக மே மற்றும் ஆகஸ்ட் கூட்டங்கள் ரத்தாகின. பிறகு, கொரோனா ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அமலுக்கு வந்ததால், ‘அக்டோபர் -2 கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும்’ என்று தமிழக அரசே அறிவித்தது. ஊரக மக்களும் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், கொரோனாவைக் காரணம் காட்டி திடீர் என்று கடைசிநேரத்தில் அதை ரத்து செய்துவிட்டது அரசு.

பலநூறு பேர் பங்கேற்கும் அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் தினமும் நடக்கின்றன. அ.தி.மு.க-வின் நாற்காலிச் சண்டைக்காகச் சென்னை, லாயிட்ஸ் சாலையே கடந்த சில தினங்களாகச் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசமின்றி அல்லோலகல்லோலப்படுவதை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சுமார் 100 பேர் மட்டுமே பங்கேற்கும் கிராமசபைக் கூட்டத்தை மட்டும் ரத்து செய்வானேன். அதில்தான் அடங்கியிருக்கிறது, அ.தி.மு.க அரசின் ‘கிராம அக்கறை’.

பி.ஜே.பி அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் உட்பட மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக, பல்வேறு ஊராட்சிகளின் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டிருந்தன. இந்தத் தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் அதிகம். நீதிமன்றங்களிலும் இதற்காகக் குட்டு வாங்க வேண்டியிருக்கும். இவற்றுக்கெல்லாம் பயந்துதான் தந்திரமாக ரத்து செய்துள்ளது அரசு.

நாட்டின் முதுகெலும்புகளைத் தன் பங்குக்கும் ஒடித்துப் பார்த்திருக்கிறது அ.தி.மு.க அரசு.

- ஆசிரியர்