சினிமா
தொடர்கள்
Published:Updated:

பட்டினிக் குறியீடு உணர்த்தும் பாடம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

உலகின் 121 நாடுகளைக் கொண்ட `பட்டினிக் குறியீடு' பட்டியலில் இந்தியா 107-வது இடத்தில் இருக்கிறது என வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நமது அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றைவிட இந்தியா தரவரிசையில் பின்தங்கி இருப்பதாக இந்தப் பட்டியல் குறிப்பிடுகிறது.

Concern Worldwide மற்றும் Welthungerlife என்ற இரண்டு அமைப்புகள் இணைந்து இந்தத் தரவரிசையை வெளியிடுகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் உலகில் பசியை அகற்ற வேண்டும் என்ற ஐ.நா அமைப்பின் இலக்கை நிறைவேற்றுவதற்காக இந்தத் தரவரிசை ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

இந்தப் பட்டினிக் குறியீட்டை கடந்த ஆண்டு நிராகரித்ததைப் போலவே இந்த ஆண்டும் நம் அரசு நிராகரித்திருக்கிறது. ``சரியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குறியீடு எட்டப்படவில்லை. பட்டினிக் குறியீடு என்று சொல்லிவிட்டு குழந்தைகள் சார்ந்த புள்ளிவிவரங்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்தப் பட்டியலைத் தயாரித்திருக்கிறார்கள். 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் வெறும் மூவாயிரம் பேரிடம் தலா எட்டுக் கேள்விகளைக் கேட்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வு எப்படி சரியானதாக இருக்கும்? பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா போன்ற திட்டங்கள் ஏழைகளின் பசியைப் போக்க எந்த அளவு உதவியிருக்கின்றன என்பதை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட தரவரிசை இது'' என்று கண்டித்து நிராகரித்திருக்கிறது மத்திய அரசு.

ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற அளவுக்கு உடல் எடை இல்லாதது, வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாதது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகிய நான்கு அளவுகோல்களை வைத்தே பட்டினிக் குறியீடு அளவிடப்பட்டுள்ளது. ``நாங்கள் தன்னிச்சையாக மக்களிடம் சென்று சேகரித்த தகவல்கள் மட்டுமல்லாது, இந்திய அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கும் ஊட்டச்சத்துக் குறைவானவர்களின் விகிதம் (Proportion of undernourished Population -PoU) போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் பட்டினிக் குறியீட்டை வெளியிட்டியிருக்கிறோம். மக்களிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்பதை பெரியவர்களைவிட குழந்தைகளிடம் கண்டுபிடிப்பது எளிது. எனவேதான் குழந்தைகள் தொடர்பான விவரங்களை அதிகம் கணக்கில் எடுத்துக் கொண்டோம்'' என்கின்றன இந்தப் பட்டியலை வெளியிட்ட அமைப்புகள்.

பட்டினிக் குறியீடு என்று பெயர் இருந்தாலும், உண்மையில் இது உணர்த்துவது பசியின் பரிதவிப்பை அல்ல, ஊட்டச்சத்துக் குறைபாட்டையே! உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்திருக்கிறோம் என்றாலும், எல்லோருக்கும் ஊட்டச்சத்துள்ள உணவு நிறைவான அளவில் கிடைக்கிறதா, அடித்தட்டு மக்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தைக் கொண்டு தங்கள் குடும்பத்திற்குத் தேவையான உணவுப்பொருள்களை வாங்க முடிகிறதா என்பதையெல்லாம் உறுதி செய்ய வேண்டியது அவசியம். பட்டினிக் குறியீடு என்பதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான்.