பிரீமியம் ஸ்டோரி

கடந்த 19 மாதங்களாகப் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. ‘இந்த நீண்ட இடைவெளியில் குழந்தைகள் முந்தைய வகுப்புகளில் கற்றதை மறந்துவிட்டனர். மொழியறிவும், அடிப்படைக் கணிதமும்கூடப் பலருக்கு மறந்துபோயிருக்கிறது’ என்ற உண்மையைக் கல்வி தொடர்பான பல ஆய்வுகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. இப்போது 9-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் நிலையில், அதற்குக்கீழ் உள்ள மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘கொரோனாத் தொற்று அபாயத்தைவிட கற்றல் இழப்பு அபாயம் அதிகரித்து வருகிறது’ என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியே அச்சம் தெரிவித்திருக்கிறார். இன்னொருபுறம், ‘18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இன்னமும் தடுப்பூசி போட ஆரம்பிக்கவில்லை. கொரோனா மூன்றாவது அலையில் பள்ளிக் குழந்தைகளை நாம் சிக்க வைத்துவிடக்கூடாது. அதனால் பள்ளிகளை இப்போது திறக்க வேண்டாம். ஆன்லைன் மூலமாகவே தொடர்ந்து வகுப்புகளை நடத்தலாம்’ என்ற குரல்களும் கேட்கின்றன. ‘ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாத அரசுப்பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கொரோனா எப்போது முற்றிலுமாக ஒழியும் என்று தெரியாத நிலையில், இன்னும் எவ்வளவு காலம் பள்ளிகளை மூடிவைப்பது?’ என்ற எதிர்க்குரல்களும் கேட்கின்றன.

தலையங்கம்
தலையங்கம்

இந்தச் சூழலில் உலக சுகாதார மையத்தின் முதன்மை அறிவியலாளர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், ‘‘பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் பல காரணங்களைக் குறிப்பிடுகிறார். ‘‘சமீபத்தில் எடுக்கப்பட்ட சீரோ சர்வே, ‘பெரியவர்கள் உடலில் எந்த அளவுக்கு கொரோனா எதிர்ப்பணு இருக்கிறதோ, அதே அளவுக்குக் குழந்தைகள் உடலிலும் இருக்கிறது’ என்று உணர்த்துகிறது. அதாவது, பெரியவர்களைப் போலவே குழந்தைகளையும் கொரோனா சம அளவு தொற்றியிருக்கிறது. குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லாவிட்டாலும் விளையாடவும் கடைகளுக்கும் போகத்தான் செய்கிறார்கள். கொரோனா தொற்றிய குழந்தைகளில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எனவே, கொரோனாவைக் காரணம் காட்டி அவர்களுக்குக் கல்வியை மறுப்பது சரியல்ல” என்கிறார் அவர். ‘கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை’ என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

குழந்தைகளுக்கான இரண்டு கொரோனாத் தடுப்பூசிகள் இந்தியாவில் ஆய்வுக்கட்டத்தில் உள்ளன. விரைவில் இவை பரிசோதனையில் வெற்றிபெற்று, பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புவோம். 9-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி ஒரு மாதமாகிறது. அச்சமூட்டும் அளவுக்கு பாதிப்புகள் ஏதுமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பாதிப்புகள் ஏற்படும்போது, அவர்களுக்கு உடனடி சிகிச்சை தரப்படுகிறது. அதற்காக பயந்துகொண்டு எல்லாப் பள்ளிகளையும் மூடுவது என்று அரசு அவசரப்படுவதில்லை என்பது ஆறுதல். போதுமான காற்றோட்ட வசதி, சுகாதாரமான சூழல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை உறுதிசெய்து பள்ளிகளைத் திறக்க வேண்டும். அதுவே மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் நல்ல முடிவாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு