சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

மன்னிக்கவே முடியாத குற்றம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

கடலூர், பிள்ளையார்மேடு கிராமத்தில் விவசாயிகள் அல்லாத 300 பேருக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டதறிந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் செய்துள்ளார்கள்.

றட்சி, வெள்ளம், கடன் தொல்லை, உற்பத்திச் செலவுக்கு ஏற்றவகையில்கூட விளைபொருள்களுக்கு உரிய விலை அமையாதது எனப் பல காரணங்களால் வதைபடும் விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு கொண்டுவந்த, ‘பிரதான் மந்திரி கிசான் சம்மன்’ திட்டத்தில் தமிழகத்தில் நடந்துள்ள மோசடி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இணைய வழியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் பயனாளிகளைப் பரிந்துரைக்கும் பொறுப்பு மாநில அரசுடையது. வருவாய்த்துறை, வேளாண்துறை ஊழியர்கள் தேர்வுசெய்துதரும் பட்டியலை வட்டார அளவிலான வேளாண்துறை அதிகாரி சரிபார்த்து இறுதிசெய்வார். மத்திய அரசின் சார்பில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நிதி செலுத்தப்படும்.

கடலூர், பிள்ளையார்மேடு கிராமத்தில் விவசாயிகள் அல்லாத 300 பேருக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டதறிந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் செய்துள்ளார்கள். இதன்மூலம் மாநிலம் முழுவதும் நடந்துள்ள இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வேளாண்துறையில் பல ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் தற்காலிக ஊழியர்களைக் கொண்டே பல பணிகள் நடக்கின்றன. இந்தத் திட்டத்தின் பயனாளிகளை இறுதிசெய்யும் அதிகாரிகள் தற்காலிகப் பணியாளர்களுக்கு பாஸ்வேர்டைக் கொடுத்ததால்தான் இந்தத் தவறு நடந்திருக்கிறது என்று தமிழக அரசு சொல்கிறது.

போலியாகச் சேர்க்கப்பட்ட பயனாளிகள் எண்ணிக்கை ஆறு லட்சம் என்று வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியும், ஐந்து லட்சம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறிச் சொல்வது தமிழக அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. உலகமே ஊழலைத் தவிர்த்து வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதற்காக இணைய வழியை நாடும்நிலையில், தமிழக முதல்வரோ “ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததே இந்த முறைகேட்டுக்குக் காரணம்” என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசு, இ-நிர்வாகத்தில் இன்னும் மேம்படவேண்டும் என்பதையே இந்த மோசடி உணர்த்துகிறது. கிராம அளவில் குழுக்களை அமைத்து அவர்கள் மூலம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள் பட்டியல் தயாரித்து, டிஜிட்டலில் அதை ஆவணப்படுத்த வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை நடத்தி தவற்றுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதோடு, இனிமேல் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருப்பதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும்.

மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை வழங்காத மத்திய அரசே தானாக முன்வந்து விவசாயிகளுக்கான நிதியுதவியை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்துகிறது. அந்தத் தொகையையும் மனசாட்சி இல்லாமல் மோசடிசெய்து விவசாயிகளின் வயிற்றலடிக்கும் பாதகர்கள் மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றவாளிகள்.