Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

இந்த 2020-ல் வந்திருக்கும் மற்றுமொரு தீர்ப்பு, இல்லத்தரசிகள் பக்கம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

வீட்டில் காலம் காலமாகப் பெண்களின் பேருழைப்பு, ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை. அவர்கள் வியர்வையின் ஈரம் பெரும்பாலும் உணரப்படாமலேயே உலர்ந்துபோகிறது. வீட்டு வேலைகள், சமையல், குழந்தை வளர்ப்பு, பெரியவர்களுக்கான கவனம், நிதி நிர்வாகம் என்று நான்கு சுவர்களுக்குள் அனைத்துப் பொறுப்புகளையும் சுமக்கும் இல்லத்தரசியை, ‘வீட்ல சும்மாதான் இருக்கேன்’ என அவள் வாயாலேயே சொல்லப் பழக்கி வைத்திருக்கிறது நம் சமூகம். 20-ம் நூற்றாண்டில் ‘ஹவுஸ் வொயிஃப்’களுக்கு ‘ஹோம் மேக்கர்’ என்று வார்த்தைஜால புரொமோஷன் கொடுக்கப்பட்டது. என்றாலும், ஒரு நன்றி, சிறு பாராட்டு என எந்த அங்கீகாரமுமற்ற வீட்டு வேலைகளை அட்டவணை மாறாமல் அவர்கள் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள், முந்தைய தலைமுறை பெண்களைப்போலவே.

மனைவியை சாலை விபத்தில் இழந்த கணவர், இழப்பீட்டுத் தொகை குறித்து தொடர்ந்த வழக்கில், 2010-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கவனம் பெற்றது. உயிரிழந்த இல்லத்தரசிக்கு 2.5 லட்சம் இழப்பீடு என்று நிர்ணயித்திருந்த தொகையை, 6 லட்சமாக உயர்த்தியது. இன்னொரு வழக்கில், அரசின் 2001 சென்சஸ் அறிக்கை, நாட்டிலுள்ள 36 கோடி இல்லத்தரசிகளை ‘வேலை செய்யாதவர்கள் (Non Workers)’ என்ற வகைமையின் கீழ், பிச்சைக்காரர்கள், கைதிகள், பாலியல் தொழிலாளிகள் பட்டியலில் இணைத்திருந்ததைக் கடுமையாகச் சாடவும் செய்தது அதே நீதிமன்றம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதோ... இந்த 2020-ல் வந்திருக்கும் மற்றுமொரு தீர்ப்பு, இல்லத்தரசிகள் பக்கம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, சாலை விபத்தில் உடல் இயக்கம் 60 சதவிகிதம் முடங்கிப்போன புவனேஸ்வரி தொடர்ந்த இழப்பீடு வழக்கில், இல்லத்தரசி என்ற அடிப்படையில் அவருக்கு 8,46,000 ரூபாய் இழப்பீடு வழங்க 2019-ல் தீர்ப்பளித்தது தீர்ப்பாயம். அதை உயர்த்தக்கோரி புவனேஸ்வரி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில், இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கியிருப்பதோடு, ‘நேரம்காலம் பார்க்காமல் உழைக்கும் இல்லத்தரசிகளை, பணியாளர்களுடன் எப்படி ஒப்பிட முடியும்’ என்றும் ஆதங்கப்பட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.

என்றாலும், நிதர்சனம் என்ன?

ஒவ்வொரு வீட்டிலும் ஊதியமற்ற வேலைக்காரர்களாகத்தான் சுழன்றுகொண்டிருக்கிறார்கள் பெண்கள். ‘சரி, வீட்டில் நீங்கள் பார்க்கும் வேலைகளுக்கு என்ன சம்பளத்தைக் கேட்பீர்கள்?’ என்று ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது, பத்தாயிரம் முதல் லட்சம் ரூபாய்வரை தங்களுக்கு சம்பள நிர்ணயம் செய்தார்கள் இல்லத்தரசிகள். அந்தத் தொகைக்கான உழைப்பை எப்படியெல்லாம் தாங்கள் தங்கள் வீட்டில் கொட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் விளக்கினார்கள். ‘மகளுக்கு நான்தான் பாடங்கள் சொல்லிக்கொடுத்தேன். பொதுத்தேர்வில், என்ட்ரன்ஸில் நல்ல மதிப்பெண்களுடன் டாப் காலேஜில் சீட் கிடைத்துள்ளது. அவளை கோச்சிங் அனுப்பியிருந்தால், லட்சம் செலவாகியிருக்கும்தானே? அது எனக்கான ஊதியம்தானே?’

இப்படித்தான், தண்ணீரில் உப்பைபோல வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திலும் முன்னேற்றத்திலும், மகிழ்ச்சியிலும் தடயம் இல்லாமல் கலந்துள்ளது பெண்களின் உழைப்பு!

நமக்குள்ளே...