Published:Updated:

நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

``எங்க நிலம், வீடு, தோப்பு, துரவு, ஏரி, குளம், கிணறு... இதையெல்லாம் அழித்துதான் நீங்கள் விமான நிலையம் கட்ட வேண்டுமா? `இழப்பீடு தருகிறோம், அரசு வேலை தருகிறோம்' என்கிற பசப்பு வார்த்தைகள் எல்லாம் வேண்டாம். ஆடு, மாடு மேய்க்கிறவர்களுக்கு எல்லாம் உங்களால் என்ன வேலை கொடுக்க முடியும். இல்லை, ஒரு வீட்டில் படித்த மூன்று பேர் இருந்தால், ஒருவருக்கு மட்டும் வேலை கொடுத்தால், மற்ற இரண்டு பேரின் நிலை என்ன?'’

20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 4,563 ஏக்கரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 13 கிராம மக்களின் குமுறல்கள் இவை.

`உங்கள் நிலத்துக்கு மூன்றரை மடங்கு மதிப்பில் இழப்பீடு தருகிறோம். வீடு கட்டுவதற்கு சுற்றுவட்டத்திலேயே இடம் ஒதுக்கிக் கொடுக்கிறோம். வீடு கட்டுவதற்கு பணம் கொடுக்கிறோம், அரசு வேலை கொடுக்கிறோம்' என்று அரசு சொல்வதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

ஒரு காலத்தில் ஆடம்பரமாகக் கருதப்பட்ட செல்போன் இப்போது எப்படி அத்தியாவசியமானதாக மாறிப்போனதோ, அதேபோல விமானப் போக்குவரத்தும் ஆகியிருக்கிறது. வளைகுடா நாடுகளுக்கும், கிழக்காசிய நாடுகளுக்கும் சாதாரண வேலைகளுக்குச் சென்று வருகிறவர்களே இதற்குச் சாட்சி.

சென்னை விமான நிலையத்தை இப்போது ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகள் பயன்படுத்துகிறார்கள். வரும் ஆண்டுகளில் இது 3.5 கோடியாக உயரும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இப்போதே விமான நிலையத்தில் பேருந்து நிலையம் போல நெரிசல். ஒரே சமயத்தில் பல விமானங்கள் கிளம்புவதற்கு வரிசையில் காத்திருப்பதும், தரையிறங்குவதற்காக பல விமானங்கள் எரிபொருளை வீணடித்தபடி வானத்தில் வட்டமடிப்பதும் நிகழ்கிறது.

இதுபோன்ற அவலநிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் இருபது ஆண்டுகளுக்கு முன்பே, சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவையை இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக இடத்தைத் தேர்வு செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருந்தோம். நமக்குப் பிறகு திட்டமிடத் துவங்கிய பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள், எப்போதோ கட்டி முடிக்கப்பட்டு முழுவீச்சில் செயல்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை டெல்லிக்கும், மும்பைக்கும் அடுத்தபடியாக நாட்டிலேயே மூன்றாவது பெரிய விமான நிலையமாக இருந்தது சென்னை. இப்போது ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இதனால் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கே சில சமயங்களில் பெங்களூரு அல்லது கொச்சி வழியாக செல்லவேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பயண நேரம் மட்டுமல்ல, பயணக்கட்டணமும் அதிகமாகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும், வேலைவாய்ப்பு பெருகவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரவும் மாநிலத்தில் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியது முக்கியம். அதனால் சென்னைக்கு இந்த விமான நிலையம் அவசியம்.

அதேசமயத்தில், தங்கள் நிலங்களையும் வீடுகளையும் இழக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டால் நிச்சயம் ஒத்துழைப்பார்கள். அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த, வெற்று வாக்குறுதிகளைத் தாண்டி நேர்மையான அணுகுமுறை அவசியம்.