Published:Updated:

வெளியேற வேண்டும்!

பசுமை வணக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை வணக்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘பசல் பீமா காப்பீட்டுத் திட்டம்... உங்கள் அனைத்துப் பிரச்னைகளுக்குமான சர்வரோக நிவாரணி. ஒரே தேசம், ஒரே காப்பீடு...

ஓடோடி வாரீர்’’ என 2016-ம் ஆண்டு இந்திய விவசாயிகளை அழைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அனைத்து மாநிலங்களும் இதில் இணைய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மழை, வெள்ளம், வறட்சி... போன்ற இயற்கைப் பேரிடர்கள், பூச்சி, நோய் தாக்குதலின்போது விவசாயிகளுக்கு இழப்பீடு அளிப்பதுதான் நோக்கம். தவணைத் தொகையாக சிறுதொகையை மட்டும் விவசாயி செலுத்தினால் போதும், மீதியை மத்திய, மாநில அரசுகளே செலுத்தும் என்பதுதான் இதன் சிறப்பு.

நடைமுறையிலிருந்த காப்பீட்டுத் திட்டங்களில் ஏகப்பட்ட குளறுபடிகள் என்பதால், புதிய திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்தனர் விவசாயிகள். ஆனால், அத்தனையும் இப்போது கானல்நீராகிவிட்டது. மாநில அரசுகள் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை உயர்த்தி கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டிருப்பதால், பி.ஜே.பி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் மாநிலங்களே இந்தத் திட்டத்திலிருந்து விலகியுள்ளன. பீகார், மேற்கு வங்க மாநிலங்கள் ‘விவசாயிகள் தவணை செலுத்தவே தேவையில்லை’ என்கிற அறிவிப்புடன் புதிய காப்பீட்டுத் திட்டத்தையே உருவாக்கிவிட்டன.

தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது எனச் சொல்லவே தேவையில்லை. இழப்பீட்டுத் தொகையை வாங்குவதற்காகக் காப்பீட்டு நிறுவனங்களிடம் போராடி, போராடி ஓய்ந்துபோகிறார்கள் விவசாயிகள். ஆகக்கூடி குளறுபடிகள் கூடி கும்மிடியக்கும் திட்டமாகவே இருக்கிறது பசல் பீமா காப்பீட்டுத் திட்டம். எனவே, தமிழக அரசும் உடனடியாக இதிலிருந்து வெளியேற வேண்டும். பீகார், மேற்கு வங்கம்போல, விவசாயிகள் தவணை செலுத்தத் தேவையில்லாத காப்பீட்டுத் திட்டத்தை கையோடு உருவாக்கவும் வேண்டும்.

- ஆசிரியர்