Published:Updated:

பொறுப்பு இருவருக்கும் உள்ளது!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

பொறுப்பு இருவருக்கும் உள்ளது!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

இந்தியாவிலேயே உயர்கல்விச் சேர்க்கையில் முதன்மை வகிக்கும் பெரிய மாநிலமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. இந்தியாவின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம், நாட்டின் முதன்மையான தொழில்நுட்பக் கல்வி மையங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை இங்குதான் உள்ளன. சட்டம், மீன்வளம், கால்நடை, உடற்பயிற்சிக் கல்வி என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பல்கலைக்கழகங்கள் கொண்ட மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. கல்வியால் உயர்வு பெற்ற குடும்பங்கள் இங்கு அதிகம் என்பதற்கு அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நம்மவர்கள் செலுத்தும் செல்வாக்கே சாட்சி. இத்தனை உயர்வுகளுக்கும் தொடர்ச்சியாகத் தமிழகத்தை ஆட்சிசெய்த அத்தனை அரசுகளும் எடுத்த முயற்சிகளே காரணம் என்பதை மறுக்க முடியாது.

கல்வியானது பொதுப்பட்டியலில் உள்ளதால், மத்திய அரசு, மாநில அரசு என இரண்டுமே உரிமை கொண்டாடும் இடங்களாகக் கல்விக்கூடங்கள் இருக்கின்றன. ஒவ்வோர் அரசும் தங்களின் எல்லையை உணர்ந்து இணக்கமாகச் செயல்படும்போது, மாணவர்கள் அதனால் நலன் பெற முடியும். இப்போதோ தமிழக அரசுக்கும், மத்திய அரசின் பிரதிநிதியான தமிழக ஆளுநருக்கும் இடையே நடைபெறும் அதிகார நிழல் யுத்தத்தின் களமாகப் பல்கலைக்கழகங்கள் மாறியிருக்க, இது தமிழக உயர்கல்விச் சூழலைப் பெரிதும் பாதிக்கும் என்ற கவலை கல்வியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தலையங்கம்
தலையங்கம்

`எதிர்கால சவால்களை சமாளிக்க, கல்வி முறையில் மாற்றம் தேவை, அதனால் தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்துங்கள்' என்று துணைவேந்தர்களுக்கு உத்தரவிடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சில மாதங்களுக்கு முன்பு அவர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி, கல்விச்சூழல் குறித்து விவாதித்தார். தமிழக அரசோ, தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக்கொள்கையை வகுக்க தனிக் குழுவை நியமித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசே ஏற்க வகை செய்யும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. அதற்கு ஆளுநர் ரவி இன்னமும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில் ஆளுநருக்குப் போட்டியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாட்டை இப்போது நடத்தியுள்ளது தமிழக அரசு. `பல்கலைக்கழகங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.3,000 கோடி நாங்கள்தான் செலவு செய்கிறோம். மாநில அரசின் கொள்கை முடிவுகளை ஏற்றே துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும்' என்று இந்த மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநரின் அதிகாரங்களும் பொறுப்புகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. துணைவேந்தர்களை நியமனம் செய்பவரும் அவர்தான். இன்னொரு பக்கம் பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்கி நிர்வகிப்பது மாநில அரசுதான். மாநில அரசின் இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை போன்றவற்றையே அவை பின்பற்றுகின்றன. இந்நிலையில் மாநில அரசு காட்டும் வழியில் செல்வதா, அல்லது, ஆளுநர் காட்டும் வழியில் செல்வதா என்று புரியாமல் தவிக்கிறார்கள் துணைவேந்தர்கள்.

கல்வியில் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகத்தின் உயர்கல்விச் சூழலை மேம்படுத்துவதே ஆளுநரின் கடமை. தமிழக அரசுக்கும் இதே கடமை உள்ளது. மோதல்களைத் தவிர்த்து, விட்டுக்கொடுத்து, பிரச்னைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது என்பதை இருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.