Published:Updated:

பொய்ச் செய்திகளும் கருத்துச் சுதந்திரமும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

பொய்ச் செய்திகளும் கருத்துச் சுதந்திரமும்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

‘இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை முறைப்படுத்தும் அமைப்பு எதுவும் இல்லாததால், பொய்ச் செய்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பும் ஊடகங்களாக அவை மாறியுள்ளன’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார்.

அதிகாரமோ, பணபலமோ, சமூகப் பின்புலமோ இல்லாத சாமானிய மக்களுக்கும் சமூக வலைதளங்கள் மேடை அமைத்துக் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. இதை அவர்களில் பலர் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. ‘உண்மையான செய்தி எது, பொய்ச் செய்தி எது, உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே திரித்துக் கூறப்படும் செய்தி எது’ என்று இனம்பிரித்துக் கண்டறிய முடியாத அளவுக்கு உண்மைபோலவே பொய்கள் உலவுகின்றன. தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சமூக வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்துவருகிறது.

‘யூடியூபில் யார் வேண்டுமானாலும் ஒரு சேனல் ஆரம்பித்துவிடலாம். எவரைப் பற்றியும் அவதூறு பரப்பும் வீடியோக்களைப் பார்க்க முடிகிறது. இதைப் பற்றி யாரிடம் போய்ப் புகார் செய்வது என்றே தெரியவில்லை. அதிகாரமிக்கவர்கள் கேட்டுக்கொண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கும் சமூக வலைதளங்கள், நீதிபதிகளோ, நிறுவனங்களோ அல்லது சாமானியர்களோ பாதிக்கப்படும்போது கண்டுகொள்வதில்லை. இதற்கு அரசு என்ன செய்யப்போகிறது?’’ என்று கேட்டிருக்கிறது, நீதிபதிகள் என்.வி.ரமணா, சூர்ய காந்த், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு. கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தினால்தான் நாட்டில் கொரோனா பரவியது என்பது போன்ற தோற்றத்தைச் சமூக வலைதளங்கள் மூலமாகச் சிலர் தோற்றுவிக்க முயன்றார்கள் என்பது குறித்த வழக்கை விசாரிக்கும்போதுதான் நீதிபதிகள் இப்படிக் கூறியிருந்தனர்.

அச்சு ஊடகங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் செய்திகளின் உண்மைத்தன்மை அறிந்து வெளியிட ஒழுங்குமுறைகள் இருக்கின்றன. சமூக வலைதளங்களில் இது இல்லை. மேலும், தாங்கள் தெரிவிக்கும், பரப்பும் செய்திகள் நம்பகமானவைதானா என்று உறுதிசெய்துகொள்ளும் பொறுப்பை ஊடகங்கள் கடைப்பிடிப்பதைப்போல தனிநபர்கள் கடைப்பிடிப்பதில்லை. இன்னொரு பக்கம் சமூக வலைதளங்கள் தங்களுக்கெனச் சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, ஊடகங்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதிப்பதும் நடக்கிறது.

தலையங்கம்
தலையங்கம்

சமூக வலைதளங்களை எப்படி நெறிமுறைப்படுத்துவது என்பதுதான் நாடு இப்போது எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய கேள்வி. ‘இதற்குத்தான் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளைக் கொண்டுவந்தோம்’ என்று மத்திய அரசுத் தரப்பில் பதில் கூறப்பட்டுள்ளது. ‘இந்தச் சட்ட விதிகள் செய்தி நிறுவனங்களின் கருத்துச் சுதந்திரத்தில் அரசின் தலையீட்டுக்கு அடித்தளம் அமைக்கின்றன’ எனப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ள நிலையில், அவற்றை மொத்தமாக உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் சூழல் உருவாக உள்ளது.

கருத்துச் சுதந்திரமும் முக்கியம், அவதூறுகள் மற்றும் பொய்ச் செய்திகளைத் தடுப்பதும் முக்கியம். அரசின் பிடிக்குள்ளோ, தணிக்கை நடைமுறைக்குள்ளோ செய்தி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாமல், சமூக வலைதளங்களில் பரவும் பொய்களையும் அவதூறுகளையும் தடுப்பதற்கான நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.