Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

காலம் காலமாக, ஒரு பெண்ணின் உடலை அவளைத் தவிர அனைவரும் உரிமை கோருபவர்களாக இருக்கிறார்கள்.

நமக்குள்ளே...

காலம் காலமாக, ஒரு பெண்ணின் உடலை அவளைத் தவிர அனைவரும் உரிமை கோருபவர்களாக இருக்கிறார்கள்.

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

டெல்லி காவல்துறையில், `சமுதாய பாதுகாப்பு தன்னார்வலர்' என்கிற வகையில் பணியாற்றிய 21 வயது இளம்பெண் அவர். 50 இடங்களில் கத்திக்குத்து, அறுக்கப்பட்ட மார்பகங்கள், தொண்டையில், பிறப்புறுப்பில் வெட்டு, துன்புறுத்தப்பட்ட உடல் எனக் கண்டெடுக்கப்பட்ட அவரது சடலம், நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. `அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை' என்கிறது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை. காதலை, பெற்றோர் எதிர்த்ததால் வீட்டைவிட்டு வெளியேறி, தன் காதலனுடன் வாழ்ந்து வந்திருக்கிறார் அவர். ஆனால், வேறு ஓர் ஆணுடன் அவர் பழக்கத்தில் இருப்பதாக சந்தேகம் கொண்ட காதலனின் வெறியாட்டம்தான், இந்தக் கொடூரக் கொலை என்கிறது காவல் துறையின் முதற்கட்ட விசாரணை.

சில தினங்களுக்கு முன்பு ஓர் இரவில் கோயம்புத்தூர் அருகே சாலையில் வாகனங்கள் ஏறி, இறங்கி சிதைந்த ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. `காரில் இருந்து வீசப்பட்டது' என்று ஆரம்பத்தில் சந்தேகித்த காவல்துறை, தடய அறிவியல் அறிக்கையில் கொலைக்கான தடயம் இல்லை, விபத்தாக இருக்கலாம் என்று விசாரித்து வருகிறது. அந்த இரவின் இருளில் புதைந்திருக்கலாம் உண்மை.

தேசியப் பெண்கள் ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை, 2021-ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், சென்ற ஆண்டின் இந்த எட்டு மாத காலகட்டத்தைவிட 46% அதிகமாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான உணர்வுரீதியான, உடல்ரீதியான வன்முறை முதல் கொலை வரையிலான பெரும்பாலான சம்பவங்களுக்குக் காரணம்... தனக்குப் பிடித்த, தனக்கான மரியாதையுடன் வாழ்வதற்கான உரிமையை, பெண்கள் எதிர்பார்க்க ஆரம்பித் திருப்பதுதான். பெண்ணை ஆணின் உடைமையாகப் பார்க்கும் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தும் வரை, இந்தக் காட்சிகள் தொடர்கதைதான்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை, அந்தப் பெண்ணுடன் சம்பந்தப்பட்ட ஆண், ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் கொள்ளும் கோபம் என்று சுருக்கிப் பார்த்தால், பிரச்னையின் வேரை நாம் தவறவிட்டு விடுவோம். பெண் மீதான அதிகாரம், அடக்குமுறை, உடைமை மனப்பான்மையின் கூட்டு வெளிப்பாடே இப்படிப்பட்ட வெறித்தனங்களுக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. சமூக வாழ்க்கையில் தங்களுக்குக் கிடைக்காத அதிகாரத்தை, மரியாதையை, தம் வாழ்வில் தொடர்புடைய பெண்கள்மீது செலுத்தி நிவர்த்தித்துக்கொள்ளும் ஆண்களின் இயலாமை வெறியாகவும்தான் இதையெல்லாம் நாம் பார்க்கவேண்டியிருக்கிறது.

நமக்குள்ளே...
நமக்குள்ளே...

காலம் காலமாக, ஒரு பெண்ணின் உடலை அவளைத் தவிர அனைவரும் உரிமை கோருபவர்களாக இருக்கிறார்கள். கல்வி, வேலை, பொருளாதார விடுதலை, வாழ்க்கைத் துணை என தங்கள் விருப்பம் போல முடிவுகளை எடுக்கும் பெண்களின் எண்ணிக்கை மெள்ள பெருகத் தொடங்கியுள்ளது. இந்த சதவிகிதம் இனியும் அதிகரிக்கவே செய்யும். அதேசமயம், `இது எனக்கு உடைமையான உடல்' என்கிற ஆணாதிக்க வெறியாட்டமும் அதிகரிக்கவே செய்யும். அந்த வெறியாட்டத்தை அடக்கி ஒடுக்குவதில்தான் இருக்கிறது பெண்களின் வெற்றி. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்பு உணர்வைத் தொடர்ச்சியாக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், குற்றங்கள் புகார்களாகப் பதிவு செய்யப்படும்; சட்ட நடவடிக்கைகள் அதிகரிக்கும்; தண்டனைகள் கடுமையாகும்; வெறியாட்டமும் குறைய ஆரம்பிக்கும்.

`பெண் உடல், அவளின் உரிமை' என்பதை நாம் உரக்க உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அதுதானே தோழிகளே இந்த வெறிநோய்க்கு அடிப்படை மருந்து!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism