Published:Updated:

குவாரி மாஃபியாக்களை வேரறுக்குமா அரசு?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

குவாரி மாஃபியாக்களை வேரறுக்குமா அரசு?

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்ற விவசாயி, லாரி ஏற்றிக் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். தன் விவசாய நிலத்துக்கு அருகில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த கல் குவாரிமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் புகார் கொடுத்தார் என்பதுதான் அவர் செய்த `மாபெரும் குற்றம்!’ இதேபோன்ற `குற்றங்களு'க்காக கடந்த காலங்களில் நேர்மையான சில அரசு ஊழியர்கள், காவல்துறையினர், சமூகச் செயல்பாட்டாளர்கள் பலர் இதேபோல கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இயற்கை வளங்களை மாஃபியாக்கள் கொள்ளையடிப்பதற்கு இடையூறாக இருக்கும் மக்கள் அச்சுறுத்தப்படுவதும், பயங்கர ஆயுதங்களால் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மிகப் பெரிய அவலம். `எங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பினால் குரல்வளையை நெரித்துவிடுவோம்' என்பதுதான் ஜெகன்நாதனின் கொலை மூலம், குவாரி மாஃபியாக்கள் தமிழக மக்களுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை. ‘அரசின் நிழலில் இருக்கிறோம், ஆட்சியாளர்களின் நேரடி ஆசீர்வாதம் நமக்கு இருக்கிறது’ என்ற துணிச்சல்தான் இதைச் செய்ய வைத்திருக்கிறது.

கல் குவாரி, மணல் குவாரி, கிரானைட் குவாரி என எதுவாக இருந்தாலும் இயற்கை வளங்களைச் சூறையாடுவதில் சுயநலமிக்க வியாபாரிகளோடு, பேராசை கொண்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்துவிடும் அவலத்தைப் பார்த்துவருகிறோம். எந்த ஆட்சி மாறினாலும், இந்தக் காட்சி மாறுவதில்லை.

மதுரை மாவட்டத்தில் நடந்த சட்டவிரோத கனிமவளக் கொள்ளை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்தார். அரசுக்கு சுமார் 16,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. ஏழு மாவட்டங்களில் கிரானைட் குவாரிகளில் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட கற்களால் அரசுக்கு 328 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக 2017-18-ம் ஆண்டுக்கான கணக்குத் தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியது.

திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளை மூடுமாறு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், குவாரி உரிமையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஆணை பிறப்பித்தது. கடந்த மே மாதம் திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட குவாரியில் விபத்து ஏற்பட்டு நான்கு பேர் பரிதாபமாக இறந்தார்கள்.

தலையங்கம்
தலையங்கம்

இத்தனை இழப்புகளுக்குப் பிறகும் கடுமையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை, சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகள் மூடப்படவில்லை என்பதையே ஜெகன்நாதன் படுகொலை உணர்த்துகிறது. வெறுமனே குவாரி உரிமையாளர்களைக் கைது செய்வது மட்டும் போதாது. இன்று ஜெகன்நாதனுக்கு நேர்ந்தது நாளை இன்னொருவருக்கு நேரக் கூடாது. குவாரி மாஃபியாக்களுக்கு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இருக்கும் நெருக்கத்தை நொறுக்காமல் இந்த சட்டவிரோத சுரண்டலைத் தடுக்க முடியாது. அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதையும் நிறுத்த முடியாது. முந்தைய அரசுகள் செய்ததைப் போல குவாரி மாஃபியாக்களை அரவணைத்துத் தங்கள் நிழலில் வைத்துக்கொள்ளப் போகிறதா, அல்லது, முதுகெலும்புடன் நிமிர்ந்து நின்று வேரறுக்கப்போகிறதா என்பதே ஸ்டாலின் அரசு முன்பாக இருக்கும் கேள்வி.