பிரீமியம் ஸ்டோரி

அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்து கிடக்காமல், கிராமங்கள் வரை பரவிப் படர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் நமது தேசத்தைக் கட்டமைத்த தலைவர்களின் பெருங்கனவு. இந்த நோக்கத்தில்தான் பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள் இயற்றப்பட்டன. குடிநீர், சாலை வசதி, துப்புரவு என மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஊராட்சி அமைப்புகளே நம் ஜனநாயகத்தின் வேர்களாக இருக்கின்றன. எளிய மனிதர்களும் தலைமைப் பதவியை அடைய முடியும் என்பதுதான் உள்ளாட்சித் தேர்தல்களின் சிறப்பு. இந்தப் பதவிகளைக் குறுக்குவழியில் சிலர் அடைய முயற்சி செய்வது வேதனை.

‘யார் பதவிக்கு வந்தாலும் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளைதான் அடிக்கப்போகிறார்கள். அதனால் ஊராட்சித் தலைவர் பதவியை அதிக தொகை தருபவருக்கு ஏலம் விட்டுவிடலாம்’ என்று முடிவெடுத்து ஏலம் விடும் போக்கு பல இடங்களில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் நடைபெற்றுவருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் இப்படி ஒரு அசிங்கம் நடந்துவிடக்கூடாது என்று மாநிலத் தேர்தல் ஆணையம் முன்கூட்டியே எச்சரித்திருந்தது.

என்றாலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பொன்னங்குப்பம் ஊராட்சித் தலைவர் பதவி 13 லட்ச ரூபாய்க்கும் ஒன்றிய கவுன்சிலர் பதவி இருபது லட்ச ரூபாய்க்கும் ஏலம் போனதாகப் புகார் எழுந்துள்ளது. அதே விழுப்புரம் மாவட்டத்தில் சித்தேரிப்பட்டு என்ற ஊராட்சியின் தலைவர் பதவி 14 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக கிராம இளைஞர்கள் புகார் செய்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றாலும், இதுபோன்ற அவமானங்கள் இனியும் அரங்கேற அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது. மக்களின் வாக்குரிமை ஏலத்துக்கு விலை போவதை அனுமதிக்க முடியாது.

கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாகத் தணியாத நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் இதை உணர்ந்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். சில மாநிலங்களில் கொரோனாத் தொற்று அதிகரிப்பதற்குத் தேர்தல்களே காரணமாகின என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.

தலையங்கம்
தலையங்கம்

வெறும் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற இருக்கும் இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டிய அவசியமென்ன என்று எதிர்க்கட்சியான அ.தி.மு.க எழுப்பியிருக்கும் கேள்வியில் நியாயம் இல்லாமலில்லை. மாநிலம் முழுதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த முடியும் என்றால், 9 மாவட்டங்களில் மட்டும் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு இரண்டு கட்டங்கள் ஏன்? பணப்பட்டுவாடா, அத்துமீறல்கள் போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் எந்த ஒரு கட்சியும் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஆளும்கட்சி முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதிகாரிகள் பாரபட்சம் இல்லாமல் தங்கள் கடமையைச் செய்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். இதேபோல நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்த வேண்டும்.

இந்திய ஜனநாயகத்தின் ஆன்மா கிராமங்களில்தான் இருக்கிறது. அதைக் காக்க வேண்டியது நம் கடமை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு