கட்டுரைகள்
Published:Updated:

உரிமைகளை மதிக்க வேண்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக இருக்கும் எல்லா நாடுகளிலும், மனித உரிமைகள் எப்படிக் காக்கப்படுகின்றன என்று ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஆய்வு நடத்தும். அதன் அடிப்படையில் ஓர் அறிக்கையும் வெளியிடப்படும். இந்தியா குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

`கிராமப்புற வறுமையை ஒழிக்க வேண்டும், பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், தரமான இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும், உணவுப் பாதுகாப்பையும் சுகாதாரமான குடிநீர் வழங்குவதையும் உறுதிசெய்ய வேண்டும், குழந்தைகள் மரண விகிதத்தைக் குறைக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும், கருத்துச் சுதந்திரத்தைக் காக்க வேண்டும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று ஒரு நீண்ட பரிந்துரைப் பட்டியலை இந்தியாவுக்குக் கொடுத்திருக்கிறது ஐ.நா மனித உரிமை கவுன்சில்.

குறிப்பிட்ட சில நாடுகள், சில கவலைகளையும் வெளியிட்டுள்ளன. குறிப்பாக, குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்ற அச்சத்தைப் பல நாடுகள் வெளிப்படுத்தின. சிறுபான்மையினர் நலன் காக்க வேண்டும் என்று கிரீஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் கூறின. இந்தியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு உதவிகள் வருவதைத் தடுப்பதாக அயர்லாந்து, தென் கொரியா போன்ற நாடுகள் புகார் கூறின.

இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த எல்லாவற்றுக்கும் அங்கேயே விளக்கம் அளித்திருக்கிறார். ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம் எந்த இந்திய குடிமகனையும் நிராகரிக்காது’ என்று சொன்ன அவர், பல நாடுகளில் இதே போன்ற சட்டங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு நிதி பெறும் பல தொண்டு நிறுவனங்கள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்தியாவில் மனித உரிமைகளைக் காக்க சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர்களும் அமைப்புகளும் செயல்படுவதாகப் பட்டியலிட்ட துஷார் மேத்தா, ‘‘அவர்களின் பணிகளைப் பாராட்டுகிறோம். என்றாலும், அவர்கள் இந்திய சட்டங்களை மதிக்க வேண்டும்’’ என்றார். ஆனால், சட்டமீறல்களை எதிர்த்்து குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள் மீதும், செயற்பாட்டாளர்கள் மீதும் சமீபகாலமாகப் பாயும் வழக்குகள் ஏராளம்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான போரில் சமரசம் செய்து வைக்கக்கூடிய இடத்தில் இருக்கிறது இந்தியா. உலக அரங்கில் இந்தியாவின் கருத்துகளுக்கு மதிப்பு கூடியிருக்கிறது. இப்படிப்பட்ட உயரத்துக்குச் செல்வதென்றால், மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும். அதை இந்தியா உணர்ந்துகொள்வது நல்லது.