கட்டுரைகள்
Published:Updated:

அண்டை தேசத்தில் அமைதி வேண்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

பாகிஸ்தானில் எப்போது அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டாலும், அதை இந்தியா கவலையுடன் கவனிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. ஏனெனில், அதன் விளைவுகள் இந்தியாவில் எதிரொலிக்கும். மக்களிடம் ஆதரவு பெற நினைக்கும் பாகிஸ்தானி தலைவர்கள், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் இறங்குவார்கள். அரசியல் தலைமை வலுவிழக்கும்போது, ராணுவம் தன்னிச்சையாக இந்தியாவுக்கு எதிரான ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும். பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல், இந்தியாவில் கவலை அலைகளைப் பரவ விட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்தார், ஷெபாஸ் ஷெரீப். தன் அரசைக் கவிழ்த்தியதில் ராணுவத்துக்கும் பங்கு இருக்கிறது என்று சந்தேகப்படுகிறார் இம்ரான் கான். பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுத் தலைவர்களிடம் பெற்ற பரிசுகளை விற்றுப் பணம் சேர்த்ததை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்.

இதைத் தொடர்ந்து லாகூர் நகரிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத் வரை மாபெரும் போராட்ட யாத்திரை ஒன்றை நடத்தினார் இம்ரான். அந்தப் போராட்டக் களத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இம்ரான் காலில் காயம்பட்டிருக்கிறார். அவர் கட்சித் தொண்டர் ஒருவர் இறந்திருக்கிறார். சுட்டவரை போலீஸ் பிடித்துவிட்டது. ‘இம்ரான் மக்களைத் தவறாக வழிநடத்துவதால் அவரைச் சுட்டேன்’ என்று பிடிபட்ட துப்பாக்கி மனிதர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஆனால், ‘இந்தத் துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் பிரதமர் ஷெரிப், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ அதிகாரி ஃபைசல் நசீர் ஆகியோர் இருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டுகிறார் இம்ரான்.

இம்ரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ‘பாகிஸ்தான் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் வரை நான் ஓய மாட்டேன்’ என்று இம்ரான் கான் சொல்கிறார். இது அரசையும் ராணுவத்தையும் நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.

அங்கு அரசியல் கொந்தளிப்புகள் அடங்கி அமைதி திரும்ப வேண்டும். சமீபத்தில் பெரும் வெள்ள பாதிப்பைச் சந்தித்த அந்த மக்களுக்கு அரசியல்வாதிகள் நிம்மதி கொடுக்க வேண்டும். அரசியல் நெருக்கடிகளை திசை திருப்ப அந்த நாட்டிலிருந்து எல்லை தாண்டி விபரீத முயற்சிகள் எதுவும் நடந்துவிடாதபடி இந்தியாவும் கவனமாக இருக்க வேண்டும்.