கட்டுரைகள்
Published:Updated:

ஒரு நல்ல தொடக்கம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட், நவம்பர் 18-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இஸ்ரோ ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், ‘விக்ரம்-எஸ்' என்ற இந்த ராக்கெட்டைத் தயாரித்திருக்கிறது. இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனரான விக்ரம் சாராபாயை நினைவுகூரும் வகையில் இதற்கு ‘விக்ரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு `ப்ராரம்ப்’ (தொடக்கம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் அதிக எடையுள்ள ராக்கெட்டுகள் அடுத்த ஆண்டில் ஏவப்படவிருக்கின்றன. இன்னும் சில தனியார் நிறுவனங்களும் இந்த வரிசையில் இணையவிருக்கின்றன. வணிக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தனியார் ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றின் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணுக்குக் கொண்டு செல்ல இது உதவியாக இருக்கும்.

அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 20 ஆயிரம் சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணுக்குச் செலுத்தப்படலாம் என்று அரசு மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 350 தனியார் நிறுவனங்கள், விண்வெளி சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்த விஷயத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், விண்வெளி தொடர்பான வணிகச் சந்தையில் வெறும் 3% மட்டுமே இந்தியா வசம் உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இதை 10%-ஆக உயர்த்த வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு. இதை எட்டிப் பிடிக்க தனியார் பங்களிப்புகள் உதவும்.

செயற்கைக்கோள்களை அதிகம் உருவாக்கும் இடத்துக்கு இந்தியா வந்துவிட்டாலும், அவற்றை எடுத்துச்செல்லும் ராக்கெட் விஷயத்தில் பின்தங்கியே இருக்கிறோம். அமெரிக்காவின் `ஸ்பேஸ் எக்ஸ்’ போன்ற நிறுவனங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஆண்டுதோறும் விண்ணில் செலுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. நம் அரசு நிறுவனமான இஸ்ரோ, இவற்றுடன் ஒப்பிடும்போது குறைவாகவே செயற்கைக்கோள்களை அனுப்புகிறது. தனியார்துறையின் முயற்சிகளும் இணைவது, இந்தியாவின் விண்வெளிச் சந்தையை விரிவாக்கும். அந்த வகையில் இது ஒரு நல்ல தொடக்கம்.