கட்டுரைகள்
Published:Updated:

ஜனநாயகம் காக்க வேண்டும் தேர்தல் ஆணையம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலைப் பெரும் உத்வேகத்துடன் சந்தித்தது, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி. ஆனாலும் ஆளும் பா.ஜ.க-வே மீண்டும் வென்றது.

தேர்தல் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம் தலைவர்களுக்கு வாய்க்கப் பெறவில்லை. அந்தத் தோல்விக்கு யார் யார் மீதோ பழியைப் போடுவார்கள். அகிலேஷ் யாதவும் இதில் விதிவிலக்கில்லை. சமீபத்தில் நடந்த தங்கள் கட்சியின் தேசிய மாநாட்டில், ‘‘உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 20 ஆயிரம் யாதவ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் திட்டமிட்டு நீக்கிவிட்டது. இந்தத் தேர்தலில் நாம் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டோம்’’ என்று பேசினார் அகிலேஷ் யாதவ்.

வழக்கமாக இது போன்ற குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் பொருட்படுத்துவதில்லை. முதன்முறையாக இந்த மரபிலிருந்து மாறியிருக்கிறது ஆணையம். ‘ஒவ்வொரு தொகுதியிலும் யார் யார் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன என ஆதாரங்கள் கொடுத்தால், நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று அகிலேஷுக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியிருக்கிறது. நவம்பர் 10-ம் தேதிக்குள் ஆதாரங்களைத் தரச் சொல்லியும் கேட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்தத் துணிச்சல் வரவேற்கத்தக்கது. இப்படிச் செய்தால், அரசியல் ஆதாயங்களுக்காக வீண்பழி போடுவதைத் தலைவர்கள் நிறுத்துவார்கள்.

அதேசமயம், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாரபட்சங்கள் இல்லாமலும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். சமீபத்தில் தேர்தல் ஆணையம், ‘தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும் கட்சிகள், அதற்கான நிதி ஆதாரம் குறித்தும் விளக்க வேண்டும்’ என்று யோசனை தெரிவித்திருந்தது. அது கடுமையான கண்டனத்துக்கு ஆளானது. `ஜனநாயகத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கோ, அரசுக்கோ, தேர்தல் ஆணையத்துக்கோ அதிகாரம் இல்லை’ என்று எதிர்க்கட்சிகள் கண்டித்தன. ‘நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதைத் தேர்தல் ஆணையம் உறுதிசெய்யட்டும்’ என்றன. தேர்தல் நேர வெறுப்பு பிரசாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கொடுக்கும் புகார்களைத் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல்விடுவது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

அகிலேஷ் யாதவ் விஷயத்தில் தன்மீது களங்கமில்லை என்பதை நிரூபிக்க, தேர்தல் ஆணையம் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இதே போன்ற நடவடிக்கையை எல்லா நேரங்களிலும் எடுத்து, அது ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்.