அலசல்
Published:Updated:

வெறுப்புப் பேச்சை விலக்கி வைப்போம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

‘‘இது 21-ம் நூற்றாண்டு. அரசியலமைப்பு சட்டத்தின் 51ஏ பிரிவு, அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கவேண்டும் எனக் கூறுகிறது. இன்று நாம் மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்? இது வேதனை தருகிறது.’’

- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனம் நொந்து குறிப்பிட்ட வார்த்தைகள் இவை. நாட்டில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்கவும், அவை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி கேரளாவைச் சேர்ந்த ஷாகீன் அப்துல்லா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதேபோன்ற வேறு சில மனுக்களையும் ஒன்றாக இணைத்து நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அவர்கள் இதைக் குறிப்பிட்டார்கள்.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், தர்ம சன்சாத் மற்றும் விராட் ஹிந்து சபா நிகழ்ச்சிகளில் சிலர் நிகழ்த்திய பேச்சுகளைக் குறிப்பிட்டார். பா.ஜ.க-வின் தலைவர்களில் ஒருவரான பர்வேஷ் வர்மா, ‘இஸ்லாமியர்களின் கடைகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்’ என்று பேசியதையும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜோசப், ‘இஸ்லாமியர்கள் சிலரும் வெறுப்பு பேச்சில் ஈடுபடுகிறார்களே?’ என்று கேட்டார். ‘யார் வெறுப்பு பேச்சைச் செய்தாலும் சட்டம் சும்மா விடக்கூடாது’ என்றார் கபில்சிபல். இருதரப்பினருமே வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு வருவதாகக் கவலை தெரிவித்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

‘ஜனநாயக, மதச்சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைகொள்ளச் செய்கின்றன. வெறுப்பு பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை. அப்படி யார் பேசினாலும் சட்ட நடவடிக்கை வேண்டும். யாரும் புகார் தரவில்லை என்றாலும், போலீஸார் தாங்களாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதைச் செய்யத் தவறினால், அவர்கள் நீதிமன்றத்தை அவமதிப்பதாக அர்த்தம்’ என்று கண்டிப்புடன் கூறினர்.

இந்த விஷயத்தில் பாரபட்சமில்லாத நடவடிக்கை மட்டுமே வெறுப்பு பேச்சுகளால் எழுந்திருக்கும் கசப்புணர்வையும் மோசமான சூழலையும் மாற்ற முடியும்.