பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வெளிநாட்டு வேலை... தேவை மோகமல்ல, விவேகம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

வெளிநாட்டு வேலை என்கிற ஆசையில் இருந்த அப்பாவி இளைஞர்களை மியான்மருக்குக் கடத்திச் சென்று, அங்கு அவர்கள் ஆன்லைன் மோசடிக் கும்பலிடம் சிக்கி சித்ரவதைக்குள்ளாக, குற்றுயிரும் குலையுயிருமாகத் தாயகம் திரும்பியிருக்கிறார்கள் 12 தமிழர்கள். இது மாதிரி 32 தமிழர்கள் ஏற்கெனவே தாயகம் திரும்பியுள்ள நிலையில், ‘கம்போடியாவிலும் இதேபோல 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர்’ என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களையெல்லாம் மீட்கும் நடவடிக்கைகளை தமிழக மற்றும் மத்திய அரசுகள் எடுத்து வருகின்றன என்பது ஆறுதல் அளிக்கிறது. தமிழக அரசாங்கம், இந்த பிரச்னையை இத்துடன் விட்டுவிடக் கூடாது. வெளிநாட்டில் நிறைய சம்பளத்தில் வேலை வாங்கித் தருகிறோம் என்று ஆசை காட்டி, லட்சக்கணக்கில் பணத்தைக் கொள்ளை அடித்து, வெளிநாட்டில் ஏதோ ஒரு மோசடி நிறுவனத்திடம் ஆயிரம், இரண்டாயிரம் டாலருக்கு விற்கும் மோசடி நிறுவனங்களைத் தமிழக அரசாங்கம் தயவு தாட்சண்யம் இன்றி ஒடுக்க வேண்டும். இது மாதிரியான மோசடி நிறுவனங்கள் தமிழகத்தில் எந்த மூலையில் செயல்பட்டாலும் அவர்கள் இனிமேற்கொண்டு அது மாதிரியான எந்த நடவடிக் கையிலும் ஈடுபட முடியாத அளவுக்கு அந்த நிறுவனங்களை முடக்க வேண்டும்.

இது சாத்தியமா எனில், நிச்சயம் சாத்தியமே! நம் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் வெளிநாட்டில் உள்ள நிறுவனத்துக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்யும்போது, வெளிநாட்டில் இருக்கும் அந்த நிறுவனம் நிச்சயம் பணம் தருமா என ஆலோசனை வழங்க இ.சி.ஜி.சி (ECGC) இருப்பதுபோல, இன்னொரு அமைப்பை நம் நாட்டில் உருவாக்க வேண்டும். இந்த அமைப்பில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே வெளிநாடுகளில் வேலை வாங்கித் தரும் பணியைச் செய்யும் நிலையை உருவாக்க வேண்டும். இந்த நிறுவனங்கள் ஏதாவது தவறு செய்தால், இந்த அமைப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இப்படி தெளிவான வரைமுறையை உருவாக்கி செயல்பட்டால் மட்டுமே நம் மக்கள் மோசடி நிறுவனங்களிடம் சிக்கி சின்னாபின்னமாவதைத் தடுக்க முடியும்.

அத்துடன், வெளிநாட்டு வேலை விஷயத்தில் நம் மக்கள் மிகுந்த எச்சரிக்கை யுடன் செயல்படுவது மிக மிக முக்கியம். அடுத்தவர்களைப் பார்த்து வெளிநாட்டு வேலையில் மோகம் கொள்வது கூடவே கூடாது. விவேகத்துடன் செயல்படுவது தான் முக்கியம். எந்த நிறுவனத்தின் மூலம் செல்கிறோம், வேலைக்கு என்ன உத்தரவாதம், மோசடி நிறுவனங்களிடம் சிக்காமல் இருப்பது எப்படி என்பதை எல்லாம் விசாரித்து, நன்கு தெரிந்துகொண்ட பிறகே, அந்த வேலைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.

உலகமயமாகிவிட்ட இன்றைய சூழலில், வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், சரியான பல நடவடிக்கை எடுப்பதன் மூலம் இந்தப் பணி சரியாக நடக்கிறதா எனக் கண்காணிக்க முடியும். அரசும் மக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இனிவரும் காலத்திலாவது இது மாதிரியான கொடூரமான சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்!

- ஆசிரியர்