Published:Updated:

காஸ் விலை உயர்வு... மக்கள் தலையில் மறுபடியும் இடி!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

காஸ் விலை உயர்வு... மக்கள் தலையில் மறுபடியும் இடி!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ்த்தட்டு மக்களின் தலையின்மீது இன்னொரு இடி விழுந்திருக்கிறது. சமையல் காஸ் சிலிண்டர்களுக்கான விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருப்பதுதான் அந்த இடி.

கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி ரூ.850-க்கு விற்பனையான சமையல் காஸ் சிலிண்டர், இந்த ஜூலைக்குள் ரூ.1,068.50 ஆக விலை உயர்ந்திருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டின் இரண்டாம் ஆறு மாதங்களில் நான்கு முறையும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நான்கு முறையும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு முடிவதற்குள் இன்னும் எத்தனை முறை உயர்த்துவார்களோ?

தற்போதைய நிலையில், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் வாங்கப்படும் முதல் 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் அளிக்கப்படுகிறது. அதற்குமேல் வாங்கும் சிலிண்டர்களுக்கு மானியம் கிடைப்பதில்லை. தவிர, பல கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் மானியம் பெறுவதில்லை. அவர்கள் முழுத் தொகையைத் தந்தே சிலிண்டரை வாங்குகிறார்கள்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்தே பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டரின் விலை நிர்ணயமாகிறது. கடந்த சில மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், தற்போது அதன் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலரைவிட குறைந்துள்ளது. இந்த நேரத்தில் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டியதே இல்லை.

இதில் இன்னொரு விநோதம், வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டருக்கான விலையைக் குறைத்துவிட்டு, வீட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியிருப்பதுதான். இந்த விஷயத்தில் ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு அணுகுமுறையை மத்திய அரசாங்கம் பின்பற்றுவது ஏன்? தவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற, இறக்கத்துக்கேற்ப பெட்ரோல், டீசலின் விலை ஏறும், இறங்கும். ஆனால், வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டரின் விலை ஒருமுறை ஏறினால் ஏறியதுதான். பல சமயங்களில் அதன் விலை குறைக்கப்படுவதில்லை.

ஒரு காலத்தில் விறகடுப்பைப் பயன்படுத்தி வந்த மக்களை பல சலுகைகளைக் கொடுத்து, சமையல் காஸைப் பயன்படுத்த வற்புறுத்தியது மத்திய அரசாங்கம். விறகடுப்பை மக்கள் ஒழித்துக்கட்டிய பிறகு, சமையல் காஸின் விலையை இஷ்டத்துக்கு உயர்த்துவது எப்படி நியாயம்? மற்ற பொருள்களின் விலையை உயர்த்தினால், அதன் பயன்பாட்டைக் குறைத்து சமாளிக்க முடியும். ஆனால், சமையல் காஸ் சிலிண்டர் அப்படியல்ல. அதை தினம்தோறும் அனைவரும் பயன்படுத்தியே ஆக வேண்டும்.

பல்வேறு பொருள்களின் விலைவாசி உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகவும் கஷ்டப்படும் நேரம் இது. இந்த நிலையில், சமையல் காஸ் சிலிண்டரின் விலையையும் உயர்த்தி, அவர்களை மேலும் கஷ்டப்படுத்ததான் வேண்டுமா? ஆட்சியில் இருப்பவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம் இது!

- ஆசிரியர்