Published:Updated:

ரிஸ்க் எடுக்கக் கற்றுத் தர வேண்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

ரிஸ்க் எடுக்கக் கற்றுத் தர வேண்டும்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

நம் மக்கள் தங்களுடைய பணத்தை எவற்றிலெல்லாம் முதலீடு செய்திருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரங்களை அண்மையில் வெளியிட்டிருக் கிறது, இந்திய ரிசர்வ் வங்கி. இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வது குறித்து நம் மக்களுக்கு இன்னும் தெளிவாகக் கற்றுத் தர வேண்டியிருக்கிறது என்கிற உண்மை புலனாகிறது.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, நம் மக்கள் அதிகம் விரும்பும் முதலீடாக இருக்கிறது வங்கி டெபாசிட். 39.49% மக்கள் தங்கள் பணத்தை வங்கி டெபாசிட்டில் போட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக ஆயுள் காப்பீட்டில் 16.73%, ஓய்வுக்கால நிதித் திட்டங்களில் 16.11%, சிறு சேமிப்புத் திட்டங்களில் 9.96% பணத்தை நம் மக்கள் போட்டு வைத்துள்ளனர். ரிஸ்க் இல்லாத இந்தத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் மிகச் சொற்பம்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் 2.06%, பங்குச் சந்தையில் 1.24% அளவுக்கு மட்டுமே முதலீடு செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் குறுகிய காலத்தில் ரிஸ்க்கானவை; ஆனால், நீண்டகால அடிப்படையில் லாபகரமானவையே!

பொதுவாக, நம் மக்கள் ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். வருமானப் பெருக்கம் என்பதைவிட முதலீடு செய்த பணத்துக்கு அதிக பாதுகாப்பு வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

மக்களின் இந்த அணுகுமுறை கடந்த காலங்களில் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய நிலை வேறு. பணவீக்கம் என்கிற விஷயம் நம் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போடுவதாக இருக்கிறது. அன்றாட வாழ்க்கைக்குத் தேவை யான அத்தியாவசியமான பொருள்கள் மட்டுமல்ல, மருத்துவப் பணவீக்கமும், கல்விப் பணவீக்கமும் இரட்டை இலக்கத்தில் உயர்ந்து, நம் சம்பாத்தியத்தை ஒட்டுமொத்தமாகக் காலி செய்துவிடுகிறது.

இதை எல்லாம் தாண்டி கொஞ்சம் பணம் மிச்சமானாலும், ரிஸ்க் எடுக்க பயந்து, மிகக் குறைந்த வருமானத்தையே பெறுகிறார்கள் பலர். இன்னும் சிலர், அதிக ரிஸ்க் எடுத்து மோசடித் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து, அத்தனை பணத்தையும் இழக்கிறார்கள்.

இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு, ரிஸ்க் என்றால் என்ன, அதை எப்படி நிர்வாகம் செய்வது என்கிற பாடங்களைக் கல்லூரிப் பருவத்திலேயே நம் மாணவர் களுக்குக் கற்றுத் தருவதுதான். வாகனம் ஓட்டுவது, ஆற்றைக் கடப்பது என எல்லாவற்றிலும் ரிஸ்க் உண்டு. அந்த ரிஸ்க்கை எப்படி சமாளிப்பது என்பதைக் கற்றுத் தெரிந்துகொண்டு, அவற்றைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி, பல நன்மைகளை அடைகிறோம். அதுபோல, முதலீட்டிலும் உள்ள ரிஸ்க்குகளை நன்கு புரிந்துகொண்டு, அவற்றை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நம் மக்கள் முயல வேண்டுமே தவிர, ரிஸ்க்கை நினைத்து பயந்து நாம் ஒதுங்கி நின்றால், இனிவரும் காலத்தில் நம் மக்கள் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்!

- ஆசிரியர்