Published:Updated:

தேவை புதுமையான வழிமுறைகள்..!

ஹலோ வாசகர்களே...
பிரீமியம் ஸ்டோரி
News
ஹலோ வாசகர்களே...

தலையங்கம்

‘வேண்டாமே ஊரடங்கு’ என வர்த்தக சமூகம் நினைத்தாலும் மத்திய, மாநில அரசாங்கங்கள் அப்படி யோசிக்கிற மாதிரி இல்லை. இனிவரும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தமிழக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மேலும், ஊரடங்கு கடந்த சில நாள்களாக இரவு நேரங்களிலும் நடைமுறையில் இருப்பது வர்த்தகர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.

மாநில அரசின் நடவடிக்கை இத்துடன் நிற்குமா எனில், நிற்காது என்பதே பலரின் கணிப்பு. பொங்கல் பண்டிகையின்போது மக்கள் நடமாட்டம் அதிக மாகும். அதனால் தொற்றுக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அந்த நிலையில், சனிக்கிழமைகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம். அல்லது முழுமையான ஊரடங்கும் கொண்டுவரப்படலாம். ஆக, கடந்த இரு ஆண்டு களில் நாம் முடங்கிய மாதிரி மீண்டும் முடங்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.

கோவிட் மூன்றாம் அலை பரவாமல் இருக்க, தமிழக அரசாங்கம் முன்னெச் சரிக்கையுடன் செயல்பட்டு பல்வேறு நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டத் தக்கதே. ஆனால், ஊரடங்கால் நோய்த்தொற்றை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முழுமையாக ஒழித்துவிட முடியாது. இந்த விஷயத்தில் சீன அரசை நாம் ஈ அடிச்சான் காப்பி அடிக்காமல், முழுமையான ஊரடங்கு தேவை தானா என்பதை மறுபரிசீலனை செய்வது நல்லது.

அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்குத் தொற்று வந்துவிட்டது என்பதைப் பார்த்து, நாம் இங்கு பதறத் தேவையில்லை. அமெரிக்காவில் முகக்கவசம் அணியும் பழக்கம் பெருவாரியான மக்களிடம் இல்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். தவிர, தொற்றை எதிர்க்கும் சக்தியும் அவர்கள் உடலில் அதிகம் இல்லை. மேலும், கடும்பனி வேறு அங்கு உலுக்கி எடுக்கிறது. இந்த நிலையில், அங்கு லட்சக்கணக்கில் தொற்று வருவது ஆச்சர்யமில்லை. ஆனால், இவ்வளவு நடந்தும் அங்கு பெரிய அளவில் ஊரடங்கு கொண்டுவரப்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

தேவை புதுமையான வழிமுறைகள்..!

முகக்கவசம் அணிவது நம் மக்களுக்கும் பிடிக்காதுதான். ஆனால், வற்புறுத்தும் பட்சத்தில் அதை அணியத் தயங்க மாட்டார்கள். பாரம்பர்யமாகவே நம் மக்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம். தவிர, நம் நாட்டில் பனிக்காலமும் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும். இப்படிப் பல விஷயங்கள் நமக்கு சாதகமாக இருக்கும்போது, எச்சரிக்கை என்கிற பெயரில் எல்லா வேலை களையும் முடக்குவது அடுத்த வீட்டுக்காரனுக்கு ஜலதோஷம் வந்தால், நாம் ஆவி பிடிக்கிற மாதிரியே இருக்கும்.

இந்த நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்குக்குப் பதிலாக புதுமையான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுத்துவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அந்த வழிமுறைகளைக் கண்டறிந்து நடைமுறைப் படுத்துவது அரசின் கடமை. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நமது மாநில அரசு, இந்தியாவுக்கு வழிகாட்டும் அரசாகத் திகழட்டும்!

- ஆசிரியர்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த நாணயம் விகடன் இதழ் ஜனவரி 14-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்றே வெளியாகும்!