Published:Updated:

நீடிக்கும் போர்... என்னவாகும் இந்திய மாணவர்களின் மருத்துவக் கனவு?

மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மாணவர்கள்

ரஷ்யாவுடன் இந்தியா இணக்கமாக இருப்பதால், எங்களை ரஷ்யாவுக்கு அனுப்பிப் படிக்க வைக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.

நீடிக்கும் போர்... என்னவாகும் இந்திய மாணவர்களின் மருத்துவக் கனவு?

ரஷ்யாவுடன் இந்தியா இணக்கமாக இருப்பதால், எங்களை ரஷ்யாவுக்கு அனுப்பிப் படிக்க வைக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.

Published:Updated:
மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மாணவர்கள்

உக்ரைன் - ரஷ்யா போரை அடுத்து இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பிவிட்டாலும், அங்கு மருத்துவம் படித்துவந்த 19 ஆயிரம் மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகியிருக்கிறது. நாடாளுமன்றத்திலும், பல மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் இது பற்றி விவாதிக்கப்பட்டாலும், இதுவரை தீர்வு எதுவும் காணப்படவில்லை. இதற்கிடையே மார்ச் 21-ம் தேதியிலிருந்து உக்ரைனின் பல பல்கலைக்கழகங்கள் பதுங்கு குழிகளிலிருந்து ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கி யிருக்கின்றன. இது எந்த அளவுக்குப் பலன் அளிக்கும் என்றும் தெரியவில்லை. என்னவாகும் இந்திய மாணவர்களின் மருத்துவக் கனவு?

உக்ரைன் - ரஷ்யா போரை அடுத்து, 1,900 தமிழக மாணவர்கள் உட்பட 19,000 இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். போர் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாததால், இவர்களது படிப்பு என்னவாகும், இந்தியாவிலேயே இவர்களின் மருத்துவப் படிப்பைத் தொடர முடியுமா, பிராக்டிக்கல் படிப்பு இல்லாமல் எப்படிப் பட்டம் பெறுவது, மீதிப் படிப்பை இந்தியாவில் முடித்தாலும் பட்டம் தருவது யார் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. இப்படி எதிர்காலம் குறித்த கவலையில் மூழ்கியிருக்கும் மாணவர்கள் சிலரிடம் பேசினோம்.

நீடிக்கும் போர்... என்னவாகும் இந்திய மாணவர்களின் மருத்துவக் கனவு?

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மனோ என்ற மாணவர் நம்மிடம், “நான் முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கிறேன். வங்கியில் கல்விக்கடன் கிடைக்காததால், என் அப்பா வீட்டை அடமானம்வைத்து கடன் வாங்கினார். முதல் தவணையாக 10 லட்சம் ரூபாய் செலுத்தி உக்ரைனில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். முதலாம் ஆண்டு படிப்புக்கூட நிறைவடையாத நிலையில், எங்கள் நிலைமை இப்படியாகிவிட்டது. போர் எப்போது முடியும் என்று தெரியவில்லை. போர் முடிந்தாலும், மீண்டும் அங்கு சென்று படிப்பதற்கான சூழல் அமையுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. இப்போது திடீரென்று எங்களில் பலருக்கு உக்ரைனிலிருந்து ஆன்லைனில் வகுப்புகளைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், அது எந்த அளவுக்குப் பலன் தரும் என்று தெரியவில்லை. எங்களுக்கு பிராக்டிக்கல் வகுப்புகள்தான் முக்கியமானவை. அந்த வகுப்புகளில் கலந்துகொண்டால்தான், மருத்துவப் படிப்பு முழுமையடையும்” என்றார்.

மற்றொரு மாணவரான ராஜா நம்மிடம், “ரஷ்யாவுடன் இந்தியா இணக்கமாக இருப்பதால், எங்களை ரஷ்யாவுக்கு அனுப்பிப் படிக்க வைக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். எங்களில் பலரும் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவிலோ, பிரிட்டனிலோ வேலை பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், ரஷ்யா மீது அமெரிக்காவும் பிரிட்டனும் பல்வேறு தடைகளை விதித்துள்ள சூழலில், ரஷ்யாவில் படித்தவர்களுக்கு அந்த நாடுகள் வேலைவாய்ப்பு வழங்குமா என்பதும் தெரியவில்லை. உக்ரைனில் நிரந்தரமாகப் போர் நிறுத்தப்பட்டு, விரைவில் இயல்புநிலை திரும்பினால் மட்டுமே எங்கள் படிப்பைத் தொடர முடியும். அது நடக்காவிட்டால், இந்தியாவிலேயே எங்கள் படிப்பைத் தொடர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கலாநிதி வீராசாமி
கலாநிதி வீராசாமி

இவர்களின் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்ட நிலையில், தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமியிடம் இது பற்றிப் பேசினோம்... “உக்ரைனில் போர் முடிவுக்கு வருவதைப் பொறுத்துத்தான் இவர்களின் மருத்துவப் படிப்பு பற்றிச் சொல்ல இயலும். இவர்கள் படிப்பைத் தொடர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளன. ரஷ்யாவுடன் நமக்கு நல்லுறவு இருப்பதால், இவர்களை ரஷ்யாவுக்கு அனுப்பிப் படிப்பைத் தொடர வைக்கலாம். ஆனால், தமிழக மாணவர்கள் பலரும் ரஷ்யாவில் படிக்க விருப்பமில்லை என்கிறார்கள். இந்திய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு, நமது அரசு மருத்துவ மனைகளிலும், பெரிய தனியார் மருத்துவமனைகளிலும் பிராக்டிக்கல் வகுப்புகளில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யலாம். அல்லது இந்தியாவிலேயே இவர்களின் படிப்பைத் தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றி தமிழக அரசும் தீவிரமாக ஆராய்ந்துவருகிறது” என்றார்.

மூத்த பத்திரிகையாளரும், மேற்படிப்புக்கான ஆலோசகருமான பொன்.தனசேகரன் நம்மிடம், “உக்ரைனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய மாணவர்கள் மருத்துவப் படிப்பைத் தொடர்வதில் சிக்கல்கள் உள்ளன. ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டாலும், அது நிரந்தரம் என்று சொல்ல முடியாது. பதுங்கு குழிகளில் இருந்துதான் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறார்கள். அங்கு ஆசிரியர் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவ மாணவர்கள் பிராக்டிக்கல் வகுப்புகளில் கலந்து கொண்டால்தான் மருத்துவப் பட்டத்தையே பெற முடியும். தியரி, பிராக்டிக்கல் ஆகிய இரண்டுக்கும் இந்தியாவிலேயே ஏற்பாடு செய்தாலும், பாடத்திட்டம் முற்றிலும் வேறு என்பதால் அதிலும் சிக்கல் இருக்கிறது. பாதிப் படிப்பை உக்ரைனில் முடித்துவிட்டு மீதியை இந்தியாவில் படித்தாலும், பட்டம் வழங்க வேண்டியது உக்ரைன் பல்கலைக்கழகம்தான். அந்தச் சூழலில் இந்தியாவில் படித்த படிப்பை, உக்ரைன் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு, இரு நாட்டு அரசுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதங்கள் இவர்களுக்குத் தேர்வு நடைபெறும் காலம் என்பதால், உடனடியாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை யென்றால், ஓராண்டுப் படிப்பை மாணவர்கள் இழக்கவேண்டியிருக்கும்” என்றார்.

பொன்.தனசேகரன்
பொன்.தனசேகரன்
நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

பா.ஜ.க-வின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் இங்கு படிப்பைத் தொடர்வது சிரமம்தான். கூடுதலாக 19 ஆயிரம் மாணவர்கள் படிப்பதற்கான கட்டமைப்புகள் நம்மிடம் இல்லை. இந்திய மருத்துவ கவுன்சில், மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் கலந்து பேசித்தான் எந்த முடிவையும் எடுக்க முடியும்” என்றார்.

இந்தியாவில் மட்டுமல்ல... அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா என உலகம் முழுவதுமிருந்து உக்ரைனில் மருத்துவம் படித்துவந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசித்தால், இதற்கான தீர்வு கிடைக்கலாம்!