Published:Updated:

மக்களை நினைத்துப் பார்க்க மறுப்பது ஏன்?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

மக்களை நினைத்துப் பார்க்க மறுப்பது ஏன்?

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஏற்றியிருக்கிறது மத்திய அரசாங்கம். கடந்த மார்ச் மாதக் கடைசியில் சமையல் எரிவாயுவின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சிலிண்டருக்கு ரூ.50 மீண்டும் இப்போது உயர்த்தப்பட்டிருக்கிறது. காஸ் சிலிண்டர் ஒன்றின் விலை இப்போது ரூ.1,018.50 என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை இப்படி உயர்ந்துகொண்டே போனால், மக்கள் மீண்டும் விறகு அடுப்பைத் தேடிச் செல்ல வேண்டிய கட்டாயம்தான் ஏற்படும்.

கடந்த நான்கு மாதங்களாகப் பணவீக்க விகிதம் ஆர்.பி.ஐ நிர்ணயித்த அளவான 6 சதவிகிதத்தைவிட அதிகமாகவே இருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் 6.95 சதவிகிதமாக இருந்த சில்லறைப் பணவீக்க விகிதம், கடந்த ஏப்ரலில் 7.79 சதவிகிதமாக அதிகரித்து, கதிகலங்க வைத்திருக்கிறது.

பணவீக்கம் இந்த அளவுக்கு அதிகமாக உயர முக்கியமான காரணம், எரிபொருள்களின் விலை அதிகமாக இருப்பதால்தான் என்கின்றன புள்ளி விவரங்கள். தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் உயர்த்தப்படவில்லை. இத்துடன் தன் கடமை முடிந்துவிட்டதாக மத்திய அரசாங்கம் நினைப்பது மிகமிகத் தவறானது. பெட்ரோல், டீசல் விலையைப் படிப்படியாகக் குறைக்கும் எந்த முயற்சியையும் மத்திய அரசு ஏன் எடுக்கவில்லை... எரிபொருள் விலை உயர்வால் மக்கள் படும் கஷ்டத்தை மத்திய அரசாங்கம் ஏன் நினைத்துப் பார்க்க மறுக்கிறது என்பது முக்கியமான கேள்விகளாக உள்ளன.

பிற மாநிலங்களில் எல்லாம் பணவீக்க விகிதம் 8 சதவிகிதத்துக்குமேல் இருக்க, தமிழகத்தில் மட்டும் கடந்த ஏப்ரலில் 5.37% என்கிற அளவில் மட்டுமே இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் தமிழக முதல்வர். தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசாங்கம் மிகக் குறைவான வரி விதிப்பதே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். தமிழகத்தின் பணவீக்கம் குறைந்த அளவில் இருப்பது மகிழ்ச்சி தான். ஆனால், மத்திய அரசாங்கம் மனது வைத்தால் மட்டுமே மக்களின் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டரின் விலையைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

லாபம் குறைந்துவிடும் என்பதற்காகப் பொருள்களின் விலையைக் குறைக்க மறுப்பது தனியார் நிறுவனங்களின் அணுகுமுறை. ஆனால், மத்திய அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான் உள்ளது. மக்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, எண்ணெய் விநியோக நிறுவனங்கள் மூலம் தங்களுக்கு வந்து சேர வேண்டிய வருமானம் குறைந்துவிடக் கூடாது என்று மத்திய அரசாங்கம் நினைப்பது எப்படி சரி..?

லாப நோக்கத்தை விட்டு, மக்களின் சிரமத்தைப் போக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், இப்போது பொறுமையாக இருக்கும் மக்கள், உரிய நேரத்தில் பதிலடி தருவார்கள்!

- ஆசிரியர்