Published:Updated:

காலம் தாழ்த்தி வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்.பி.ஐ..!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

காலம் தாழ்த்தி வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்.பி.ஐ..!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

கடந்த புதன்கிழமை அன்று நமது ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தைத் திடீரென உயர்த்தியிருக்கிறது. 2018 ஆகஸ்ட்டுக்குப் பிறகு, முதல்முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கையை ஆர்.பி.ஐ இப்போது எடுத்திருக்கிறது.

பொதுவாக, காலாண்டுக்கொரு முறை கூடும் நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில்தான் வட்டி விகித உயர்வு முடிவை ஆர்.பி.ஐ எடுக்கும். ஆனால், இந்த முறை திடீரென அந்தக் கூட்டத்தைக் கூட்டி, வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ உயர்த்தியுள்ளது. இதைப் பார்த்தால், ஏதோ ஒரு பதற்றத்தில் அவசர அவசரமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

இந்த வட்டி விகித உயர்வுக்கு ரிசர்வ் வங்கி சொல்லும் முக்கியமான காரணம், மிக அதிக அளவில் இருக்கும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான். கடந்த ஓராண்டுக் காலமாக பணவீக்கம் அதிகமாகவே இருக்கிறது. ஆர்.பி.ஐ நிர்ணயம் செய்துள்ள 5 சதவிகிதத்தைவிட, கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகமாகவே இருந்துவரும் நிலையில், வட்டி விகிதத்தை கடந்த அக்டோபரில் அல்லது டிசம்பரில் அல்லது கடந்த மார்ச்சில்கூட உயர்த்தியிருக்கலாம். அப்போதெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம்? வட்டி விகிதத்தை உயர்த்தினால் வாக்காளர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும். இதனால் மக்களின் ஆதரவு குறையும் என மத்திய அரசாங்கம் மறைமுகமாகத் தந்த நெருக்கடிதானா?

தவிர, கடந்த புதன்கிழமை இரவு அமெரிக்க ஃபெட் அமைப்பானது வட்டி விகிதத்தை 0.50% அளவுக்கு உயர்த்தியது; இந்தத் தகவலை முன்கூட்டியே உணர்ந்ததன் காரணமாகத்தான் ஆர்.பி.ஐ திடீரென கூடி வட்டி விகிதத்தை உயர்த்தியதா என்கிற கேள்வியும் எழுகிறது.

ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தை உயர்த்தியதால், ரூ.87,000 கோடி கூடுதலாக புழங்கு வது குறையும் என்றாலும், இதனால் பணவீக்கம் கொஞ்சமாவது குறையுமா என்பது சந்தேகமே. காரணம், தற்போது பணவீக்கம் அதிகமாக இருக்கக் காரணம், பெட்ரோல் - டீசல் விலை உச்சத்தில் இருப்பதே. தவிர, ரஷ்ய - உக்ரைன் போரின் பதற்றம் தணியாமலே இருக்கிறது. கோவிட் பாதிப்பின் காரணமாகப் பொருள்கள் விநியோக சங்கிலி இன்னும் சரியாகவில்லை. சர்வதேச அளவில் இப்படித் தீர்க்க முடியாத பல பிரச்னைகள் இருக்கும் நிலையில், வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ உயர்த்தியதால் பணவீக்கம் குறையுமா என்பது கேள்விக்குறியே!

இந்த நிலையில், இந்த வட்டி விகித உயர்வு ஒரு தொடக்கம் மட்டுமே. அடுத்தடுத்த மாதங்களில் வட்டி விகிதம் இன்னும் உயர்த்தப்படும் என எச்சரிக் கிறார்கள் நிபுணர்கள். இதனால் தொழில் நிறுவனங்களின் வட்டிச் செலவு அதிகரித்து, லாபம் குறையும். புதிய திட்டங்கள் நடைமுறைப்படுவது தள்ளிப் போய், வேலைவாய்ப்புகள் குறையும். ஆக, இனிவரும் காலத்தில் நாம், மிகப் பெரும் கஷ்டத்தை அனுபவிக்கத் தயாராக இருக்க வேண்டும்போல!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism