Published:Updated:

சகோதர யுத்தம் வேண்டாம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

சகோதர யுத்தம் வேண்டாம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

இரு நாடுகளுக்கு இடையில்தான் எல்லைப்பிரச்னைகளும் அதுதொடர்பான வன்முறைகளும் நிகழும் என்ற நினைப்பைப் பொய்யாக்கியிருக்கிறது அசாம் - மிசோரம் எல்லை மோதல். இந்தியாவின் இரு மாநிலங்களுக்கு இடையே நிகழ்ந்த எல்லை மோதலில் வன்முறையின் கோரத்தாண்டவம் அரங்கேறியது.

அசாம் மாநில அதிகாரிகள் எல்லைக் கிராமம் ஒன்றில் சாலை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரம் கிராமவாசிகள் ஒன்றுதிரண்டனர். ஜூலை 26 அன்று இரு மாநில போலீஸ் படையினர் முன்னிலையிலேயே மோதல் நிகழ்ந்தது. வன்முறையைக் கட்டுப்படுத்த மிசோரம் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அசாம் போலீசார் ஆறு பேரும் பொதுமக்கள் தரப்பிலிருந்து ஒருவரும் பலியாகினர்.

அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தபோது வேண்டுமென்றே மிசோரம் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அசாம் குற்றம் சாட்டியது. வன்முறைத் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ளவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மிசோரம் சொன்னது. அதன்பின் நடந்தவை எல்லாமே, தலைகுனிய வைக்கும் கறுப்பு வரலாறு.

துப்பாக்கிச்சூடு தொடர்பாக மிசோரம் மாநிலத்தின் ராஜ்யசபா எம்.பி ஒருவர் மற்றும் போலீஸ் அதிகாரிகள்மீது வழக்கு பதிவு செய்த அசாம் போலீஸார், அவர்களை விசாரணைக்கு அசாம் வந்து ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். பதிலடியாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் ஐ.ஜி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தது மிசோரம். இந்த வழக்குகள் நாடு முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.

தலையங்கம்
தலையங்கம்

அசாம் வழியாக மிசோரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அசாம் மக்கள் துண்டித்துவிட்டனர். மிசோரமுக்குச் செல்லும் ஒரே ரயில் பாதையும் சேதப்படுத்தப்பட்டது. இன்னொரு பக்கம் தங்கள் மாநிலத்துக்கு அசாமிலிருந்து மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வருவதை அசாம் அதிகாரிகள் தடை செய்வதாக மிசோரம் குற்றம் சாட்டியது. ‘மிசோரமில் வசிக்கும் மற்றும் மிசோரம் மாநிலத்துக்குப் பயணம் செய்யும் அசாம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்’ என அசாம் மாநிலம் வழிகாட்டு நெறி வெளியிட்டது. வழக்கமாக போர் மற்றும் தொற்றுநோய்ச் சூழலின்போதுதான் இப்படி எச்சரிக்கை விடுப்பார்கள்.

அசாமில் பா.ஜ.க அரசு ஆட்சி செய்கிறது. மிசோரமில் இருப்பதும் பா.ஜ.க கூட்டணி அரசுதான். இப்போது அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி, தற்காலிக சமரசத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

அசாம், மிசோரம் இடையேயான 164 கி.மீ தூர எல்லைப் பகுதியை வரையறுப்பதில் இரண்டு மாநிலங்களுமே இன்றுவரை உடன்பாட்டுக்கு வரவில்லை. இதேபோல மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களோடும் அசாமுக்கு எல்லைப் பிரச்னை உண்டு. இந்த எல்லைப் பிரச்னைகளால் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவது வாடிக்கை. பல்வேறு பழங்குடி இனங்கள் வாழும் வடகிழக்கு மாநிலங்களில், ஒவ்வொரு பழங்குடி இனமும் தங்கள் எல்லையாக ஒரு நிலக்கோட்டைக் கருதுவதுதான் சிக்கல். இப்போது செயற்கைக்கோள் உதவியுடன் எல்லைக்கோட்டை வரையறுக்க மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது.

வட கிழக்கு மாநிலங்களை ஏழு சகோதரிகள் என்று குறிப்பிடுகிறோம். அவை தமிழகம் உட்பட இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களுக்கும் சகோதரிகள்தான். சகோதர யுத்தம் வேண்டாம் என 75வது சுதந்திர தினவிழா தொடங்கவிருக்கும் நிலையில் உறுதி ஏற்போம்.