Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

நவோமி ஒசாகா... டென்னிஸ் உலகின் சூப்பர் வுமன். உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பெண் விளையாட்டு வீரர் என்ற பெருமைபெற்ற 23 வயது இளம் காந்தம். டென்னிஸில் சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜப்பானியப் புயல். சமீபத்தில் நடந்த 2021 பிரெஞ்சு ஓப்பன் போட்டியின் முதல் சுற்றில் வென்றவர், தொடரிலிருந்து விலகுவதாக திடீரென அறிவிக்க... உலகமே அதிர்ச்சியானது. அதற்கான காரணமாக அவர் அறிவித்திருப்பது... மன அழுத்தம்.

பத்திரிகையாளர்களின் எதிர்மறை கேள்விகள் தன் மனநலனை பாதிப்பதாகக் கூறி, போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்தார் நவோமி. இந்தப் போட்டியைப் பொறுத்தவரை பேட்டி கொடுப்பது கட்டாயமான ஒன்றாகவே இருப்பதால், பிரெஞ்சு ஓப்பன் நிர்வாகத்தின் அபராதம், எச்சரிக்கை என சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, தொடரிலிருந்தே விலகுவதாக அதிரடியாக அறிவித்துவிட்டார் நவோமி. 2018 முதலே தான் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருவதாகவும், இப்போது சிறு ஓய்வு எடுத்துக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தத் தருணம், நவோமிக்கு நேர்ந்தது மட்டுமல்ல தோழிகளே. ஓர் உச்சக்கட்ட மன உளைச்சலில் வீட்டில் மொபைலைத் தூக்கி எறிவது முதல் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை நீட்டுவதுவரை... நம்மில் பலரையும் இந்த மன அழுத்தம் விரட்டியிருக்கிறது, விரட்டிக்கொண்டிருக்கிறது. அதை நாம் கண்டுகொள்ளாமலோ, கையாளாமலோ விட்டால், பின்னர் அது நம்மைக் கையாளத் தொடங்கிவிடும். என்ன செய்யலாம்..?

கடினமான தருணங்களில் சோகமாக உணர்வது இயல்பு; அது விரைவில் மறைந்துவிடும். ஆனால், நம் உணர்வில், எண்ணத்தில், செயல்பாடுகளில் நீடித்த மனக்கோளாறுகள் இருந்தால், அதை மன அழுத்தம் என்று உணர்வோம். அது நம் குணக்குறைபாட்டால் ஏற்படுவதில்லை. எனவே, எந்தக் குற்ற உணர்வும், சுயபச்சாதாபமும் தேவையில்லை. அதேபோல, குடும்பப் பிரச்னை, கடன், காதல் தோல்வி என இது சூழலால் ஏற்படுவதுமல்ல. கண்புரை, திசுக்கட்டிபோல அது ஒரு மருத்துவ நிலை, அதற்குத் தேவை மனநல சிகிச்சை. அதற்கான வழிகளைக் கண்டடைவோம். மனநல மருத்துவர் பரிந்துரைக்கும் ஆலோசனைகளை / மருந்துகளை எடுத்துக்கொள்வோம்.

பெண்களுக்கு உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பகாலம், பிரசவத்துக்குப் பின்னான காலம், மெனோபாஸுக்கு முந்தைய காலம் என வாழ்வின் பல கட்டங்களிலும் மனஅழுத்தத்துக்கான வாய்ப்பு அதிகமாகிறது. எனவே, இந்தக் காலகட்டங்களில் நம் மனதில் நடக்கும் போராட்டங்களை, ஹார்மோனின் வேலை என்று புரிந்துகொள்வோம். புரிந்துகொள்வது மட்டுமே அதிலிருந்து நிவாரணம் கொடுத்துவிடாது என்பதால், இந்தச் சூழல்களில் மருத்துவ ஆலோசனையையும் புறம்தள்ளாது இருப்போம்.

நம் மனப்போராட்டங்களை மட்டுமல்லாமல், நம்மைச் சுற்றியிருக்கும் பெண்களின் மன அழுத்தங்களையும் புரிந்துகொள்வோம், அதற்கான தீர்வை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வோம். எப்போதும் பதற்றத்தில் இருக்கும் சக பெண்களை, ‘அவ அப்படித்தான் டென்ஷன் பார்ட்டி’ எனவும், அடிக்கடி கோபப்படும் பெண்களை, ‘அவ திமிர் பிடிசவ’ என்றும் நம் ஜட்ஜ்மென்ட்களால் கடந்துவிடாமல், அவர்களின் பிரச்னையை நெருங்கிச் சென்று அறிந்துகொள்வோம். அவர்கள் மனதை அழுத்தத்திலிருந்து மீட்க கைகொடுப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism