லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

தலையங்கம்

கொரோனா பரவல் காரணமாக, சென்ற வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டது. 2021-ல் கொரோனாவிலிருந்து விடுபட்டுவிடுவோம் என்று உலகமே எதிர்பார்த்திருந்தது. ஆனால், இந்த மார்ச்சில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, நம்மை இன்னும் சில காலத்துக்கு கவனமாக இருக்கச் சொல்கிறது.

சென்ற மார்ச்சில் ஊரடங்கு போடப்பட்டபோது, நம் அனைவரிடமும் நோய் குறித்த அச்சமும், அதை எதிர்கொள்வதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளும் காணப்பட்டன. ஆனால் இப்போதோ, உருமாறிய கொரோனா வைரஸ், இரட்டை உருமாறிய கொரோனா வைரஸ் என்றெல்லாம் மருத்துவர்கள் சொன்னாலும்கூட, நம்மிடம் தேவையான எச்சரிக்கை உணர்வு இல்லை.

ஊர்ப்பக்கங்களில் எல்லாம் மாஸ்க் என்பதை மக்கள் மறந்தேவிட்டோம். விழாக்கள், விசேஷங்கள் என்று பழையபடி கூட்டம் கூடுகிறோம். 500, 1,000 பேர் எனக் கூட்டம் கூடும் திருமண மண்டபங்கள் எல்லாம் வரவிருக்கும் திருமண சீசனுக்கு புக் ஆகிவிட்டன. ஊர்த் திருவிழாக்களுக்குக் காப்பு கட்டியிருக்கிறோம். இன்னொரு பக்கம், தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் தினம் தினம் கூடிப் பிரிகிறோம்.

கொரோனாவின் வீரியம் குறைந்துவிட்டது, முதல் அலைபோல இரண்டாவது அலையில் பாதிப்பு இருக்காது என்றெல்லாம் நமக்கு நாமே சாக்குகளும் சமாதானங்களும் சொல்லிக்கொண்டு மூடத்தனமான தைரியத்துடன் இருப்பது சரியா?

பல நகரங்களில் பல ஏரியாக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் கொத்துக் கொத்தாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாசிட்டிவ் ஆகிறார்கள்.

மார்ச் மாத இறுதியில் ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது மாநில கொரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில் பலர், மெத்தன மனநிலையுடன் கொரோனாவை அணுகியவர்களாக இருக்கலாம். உயிரிழப்பு செய்திகளையும் கேட்கிறோம்.

கொரோனாவைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே அது எல்லா கணிப்புகளையும் அடுத்தடுத்து பொய்யாக்கி வருவதையே பார்க்கிறோம். எனவே மாஸ்க், சானிட்டைஸர், தனிமனித இடைவெளி இவற்றையெல்லாம் இன்னும் சிறிது காலத்துக்கு நம் வாழ்க்கை முறையாக்கிக்கொள்வதைத் தவிர, வேறு வழியில்லை என்பதை உணர்வோம். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், அதற்கான முழு ஒத்துழைப்பைத் தருவோம்.

எல்லா ஊர்களிலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தடுப்பூசி குறித்த சந்தேகம், அச்சம் இருப்பவர்கள் அதைத் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்ளாமல், குடும்ப மருத்துவர் அல்லது அருகில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்று, அது குறித்த விளக்கங்களைப் பெறுவோம். மருத்துவ அறிவுரையின் பேரில் தடுப்பூசி போட்டுக்கொள்வோம். நாம் போட்டுக்கொள்ளும் தடுப்பூசி என்பது நமக்கான பாதுகாப்பு மட்டுல்ல. நம்மைச் சார்ந்தவர்களுக்கான பாதுகாப்பையும் அதன் மூலம் உறுதிசெய்கிறோம் என்பதை உணர்வோம்.

பெருந்தொற்றின் பிடியிலிருந்து இந்த உலகை விடுவித்துக்கொள்வதில், நம் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வும் முக்கியமானது தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்