என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

நமக்குள்ளே

நமக்குள்ளே
News
நமக்குள்ளே

குடிமக்களாக நம் முதன்மை கடமை, கொரோனா உருமாற்றம் பெற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை நம் புத்தியை ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான்

தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் கிட்டத்தட்ட 4,000 வரை அதிகரித்துள்ளது. மாநிலம் முழுக்க சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பழைய கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழகத்தில் மீண்டும் அமலாக ஆரம்பித்துள்ளன.

குடிமக்களாக நம் முதன்மை கடமை, கொரோனா உருமாற்றம் பெற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை நம் புத்தியை ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான். ‘நம்மை அச்சுறுத்தத்தான் எண்ணிக்கையை அதிகமாகச் சொல்கிறார்கள்’, ‘முன்புபோல பாதிப்பு எல்லாம் இருக்காது’ என்றெல்லாம் ஆரூடம் பேசிக்கொண்டிருக்கும் நேரம் அல்ல இது என்பதை உணர்வோம். ஒரே நாளில் 17 உயிரிழப்புகள்வரை ஏற்பட்டிருக்கிறது என்பது, நமக்கான எச்சரிக்கை மணி. இப்போது நாம் தவறாமல் செய்ய வேண்டியவை, கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றுவதும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுமே.

கொரோனா பொதுமுடக்கத்தில் நமக்கு ஏற்கெனவே அனுபவம் இருக்கிறது என்பதால், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதிலிருந்து பள்ளி, கல்லூரி ஆன்லைன் வகுப்புகள், அலுவலக ஆன்லைன் மீட்டிங்குகள்வரை வீட்டுக்குள்ளேயே உலகத்தை சுழலவைக்கும் நடைமுறைகளை அறிவோம். சென்ற முறை இதில் நேர்ந்த குழப்பங்கள், தவறுகளை இப்போது சரிசெய்துகொள்ளலாம்.

தியேட்டர் போன்ற கேளிக்கை இடங்களில் 50% மட்டுமே அனுமதி, வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி, திருமண வீடுகளில் 100 பேர் மட்டுமே அனுமதி என்பதெல்லாம், நோய்த்தடுப்புக்கான அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள். ‘100 பேர் செல்லலாமாம்... எனில், நாமும் சென்று வரலாம்’ என்று அதைத் தளர்வாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கோடை பயணங்கள், கோயில் திருவிழாக்கள், திருமண விசேஷங்கள் என நம் முன் இருக்கும் சவால்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்துக் கடக்க வேண்டியது முக்கியம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஏற்கெனவே உடல்நலக் கோளாறுகள் இருப்பவர்கள், முதியவர்கள் என இவர்கள்தாம் கொரோனாவால் தீவிர பாதிப்படைவார்கள் என்பதில்லை. யாரும் கொரோனாவுக்கு இலக்காகலாம் என்பதை அது பலமுறை நமக்கு நிரூபித்துவிட்டது. மேலும், நம் உயிர் மட்டும் நம் பொறுப்பல்ல, நம் வீட்டில், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் உயிரும் இப்போது நம் பொறுப்பில்தான் உள்ளது என்ற முதிர்ச்சியுடன் அரசாங்கத்தின் கொரோனா கால கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்போம். தடுப்பூசி உட்பட அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கைகொள்வோம்.

பள்ளி, கல்லூரி கல்வியைப் பொறுத்தவரை, கட்டணம் முதல் தேர்ச்சிவரை உள்ள குழப்ப சூழல்களைக் களைய, அரசு நிபுணத்துவ ஆலோசனையின் அடிப்படையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மீண்டும் தொழில் முடக்கம், வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு போன்ற சிரமங்கள் எல்லாம் நம்மை நோக்கி வர வாய்ப்பு உண்டாகியிருப்பதால், கையிலிருக்கும் பணத்தை கவனமாகச் செலவழிப்போம், சேமித்து வைத்துக்கொள்வோம்.

எண்ணற்ற இயற்கை மற்றும் செயற்கைப் பேரிடர்களையெல்லாம் கடந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித இனம் தழைத்து நிற்கிறது என்பதையே நம்பிக்கை தீபமாக நெஞ்சில் ஏந்துவோம் தோழிகளே. சமூகப் பொறுப்புடனும், தற்காப்பு நடவடிக்கைகளுடனும், மன உறுதியுடனும் எதிர்கொள்வோம் வரும் நாள்களை!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்