சமூக நலத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் வழங்கப்பட்டு வந்த திருமண நிதியுதவித் திட்டம், தமிழக பட்ஜெட் 2022-ல் பெண்களின் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது, வரவேற்பு, விமர்சனம் என்று கலவையான வினைகளைப் பெற்று வருகிறது.
இதுவரை, பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.25,000, எட்டு கிராம் தங்கம், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.50,000, எட்டு கிராம் தங்கம் என... ‘தாலிக்குத் தங்கம்’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இப்போதைய மாற்றியமைப்பில், அரசுப் பள்ளிகளில் 6 - 12-ம் வகுப்பு வரை படித்துப் பட்டப்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும், ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயன்பெற ரூ.698 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது அரசு.
பெண்களுக்கு இலக்கு திருமணம் அல்ல, கல்வியே தனிப்பெருந்துணை... அதை நோக்கிய பாதையில் இருக்கிறது இந்த அறிவிப்பு. மேலும், அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவிகளை வரவைக்கும் என்ற வகையில், இந்தத் திட்டத்துக்கு தொலைநோக்கில் வரவேற்புக் குரல்கள் எழுகின்றன. இன்னொரு பக்கம், தொகை, தங்கம் என முந்தைய திட்டத்தின் மூலம் கிடைத்து வந்த, கிட்டத்தட்ட ரூ.90,000 மதிப்புள்ள உதவி பல ஏழை, எளிய குடும்பத்து மகள்களின் திருமணத்துக்கு எத்துணை முக்கியமானது என்பதையும், இப்போது பயனருக்கு அது ரூ.36,000 ஆக குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள் செயற்பாட்டாளர்கள்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின் நோக்கம் திருமண உதவி என்பதைவிட, பெண்களை பள்ளி, பட்டப்படிப்பு முடிக்க வைப்பதே. எனவே, இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், நோக்கத்தின் அடிப்படையில் சரியானதே. என்றாலும், பல ஏழைக் குடும்பங்களுக்கும் ஊக்கமாக இருந்த ஓர் உதவி கைவிடப்படுவது சரியா என்ற கேள்விக்கு அரசிடம் வலிமையான பதில் இல்லை.
தங்கம் விலை உயர்வு சூழலில் அரசுக்குத் தாலிக்குத் தங்கம் திட்டம் தரக்கூடிய நிதிச்சுமையே இந்த முடிவுக்குக் காரணமா? இதுவரை இந்தத் திட்டத்தில் நடந்துள்ளதாகச் சொல்லப்படும் ஊழல்களுக்கான தண்டனை என்ன? ஊழல்களைக் களைந்தாலே நலத்திட்டங்களுக்கான நிதி கிடைக்கும் என்பது ஒருபுறம் இருக்க, எளிய மக்களுக்கான நிதி உதவித் திட்டங்களிலும் ஊழல் நடக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது?
மத்திய அரசு கடந்த வருடம் வெளியிட்ட ஆய்வு முடிவின்படி (AISHE - The All India Survey of Higher Education 2019-20), இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் சேரும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. இது இன்று, நேற்று நடந்த மாற்றமல்ல. பெண் கல்விக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வந்த தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அரசுகள், மகள்களைப் படிக்க வைத்த தமிழ்க் குடும்பங்கள், படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மாணவிகளின் தன்னெழுச்சி என... இந்தப் பயணம் நெடியது. தேர்தல், பட்ஜெட், திட்டம் என்பதையெல்லாம் தாண்டி... அதைத் தொடர்வோம் தோழிகளே!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்.