Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

கடந்த மே 7-ம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், அன்றைய தினமே, ‘மாநகர மற்றும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் பயணிக்கலாம்' எனும் வரவேற்கத்தக்க அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியானதுமே பலர் கேலி செய்தார்கள், மீம்ஸ் வெளியிட்டார்கள், ‘மாநில அரசு ஏற்கெனவே கடனில் இருக்கும் நிலையில் இதெல்லாம் தேவையா?’ என்றார்கள்... ஆணாதிக்கச் சிந்தனைகளோடு விமர்சிக்கவும் செய்தார்கள்.

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகமயமாதல் எனப் பல தளங்களிலும் பெண்களின் எல்லை காலங்காலமாகத் திட்டமிட்டே சுருக்கப்பட்டது. அதன் நேரடி விளைவாக, பெண்குலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் முடக்கப்பட்டது. மிக முக்கியமாக, பொருளாதார பலமற்ற இனமாகப் பெண்களை அழுத்திவைத்தனர். இன்றைக்கு அனைத்துத் தடைகளையும் உடைத்துக்கொண்டு ஓரளவுக்கு முன்னேறப் பார்த்தாலும், பொருளாதார நெருக்கடி என்பது, அடுத்த அடி எடுத்து வைக்கவிடாமல் தடுக்கப்பார்க்கிறது. இத்தகைய சூழலில், பெண்களைக் கைதூக்கிவிடும் திட்டமாகவே இதுபோன்ற திட்டங்கள் இருக்கும் என்பது உறுதி.

பெண்கள்தாம் பொதுப் போக்குவரத்தை அதிகம் நம்பியுள்ளனர். இன்னும் ஒன்றிரண்டு நிறுத்தங்கள் நடந்து சென்று ஏறினால் கட்டணம் குறையும் என்று பயணிப்பவர்கள், கூலி வேலை முதல் அலுவலக வேலை வரை தங்கள் வருவாயில் குறிப்பிட்ட தொகையை போக்குவரத்துக்குத் தந்துகொண்டிருப்பவர்கள் எனப் பெண்களின் கூட்டம், இங்கே பெருங்கூட்டமே. அத்தகையோரின் பாதங்களை தைத்துக் கொண்டிருந்த பொருளாதார நெருக்கடி எனும் முற்களை, இந்தக் கட்டணமற்ற பயணம் நீக்கியிருக்கிறது. மாதம்தோறும் சுமாராக 1,000 ரூபாயைச் சேமித்துக் கொடுக்கும் இந்தத் திட்டம், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நகர்வுக்கான மிக முக்கியமான முன்னெடுப்பே. பெண்களின் நகர்வு, உழைப்பு மற்றும் வருவாயில் அவர்களின் பங்கேற்பை முன்நகர்த்தும் முக்கியக் காரணி என்கிற வகையில் இந்தத் திட்டம், எதிர்காலத்துக்கான முதலீடுகூட.

ஆரம்பத்தில் எழுந்த கேலிகளுக்கு, விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் தந்து முடித்திருக்கும் சூழலில், இன்னொரு பிரச்னை இப்போது பரவலாகப் பேசப்படுகிறது. பேருந்து நடத்துநர்கள், ஓட்டுநர்கள் பலரும் பெண் பயணிகளிடம் காட்டும் பாகுபாடு அதிர்ச்சியளிக்கிறது. எழுந்து வந்து பயணச்சீட்டு வாங்கச் சொல்வது, குறிப்பிட்ட இருக்கைகளில் மட்டுமே அமர வைப்பது, பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சலிப்பாகப் பேசுவது, பெண் பயணிகள் காத்திருக்கும் நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தாமல் செல்வது எனப் புது வகையான தீண்டாமையைக் கையில் எடுக்கப்பட்டிருப்பதாகப் பெண்கள் பலரும் புகார் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய போக்கை அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் தனிப்பட்ட அணுகுமுறைக் கோளாறாகப் பார்ப்பதைவிட, ஆணாதிக்கத்தின் முகமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

பெண்களே... முதலில் இதுபோன்ற திட்டங்களை நமக்கான சலுகை என்று நினைப்பதிலிருந்து நாம் விடுபட வேண்டும். இது எங்களின் உரிமை என்று பலமாக எதிர்க்குரல் கொடுக்க வேண்டும். அந்தக் குரல், ஆணாதிக்க மனப்பான்மையோடு அடக்கியாள நினைப்பவர்கள் உணர்ந்து திருந்துவதாகவோ, ஒடுங்கி அடங்குவதாகவே இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

குரல் கொடுப்போம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism