Published:Updated:

நமக்குள்ளே...

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் முதல் மூன்று இடங்களையும் பெண்களே பிடித்து, வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளனர். பிரதமர் தொடங்கி மக்கள் வரை அனைவரும் உச்சிமோந்துள்ளனர் இந்தத் தங்கங்களை.

முதல் இடத்தைப் பிடித்துள்ள ஷ்ருதி ஷர்மா, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். நான்கு வருடங்களாக யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயார் செய்து வருபவர், முதல் முயற்சியில் நேர்காணலில் ஒரு மதிப்பெண்ணில் தேர்ச்சியை தவறவிட்டவர். இந்த முறை இரண்டாவது முயற்சியில் இந்திய அளவில் முதலிடம் பெற்றிருக் கிறார். இரண்டாவது இடம் பெற்ற அங்கிதா அகர்வால், கொல்கத்தாவைச் சேர்ந்தவர். 2019-ம் வருடம் தன் முதல் முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஆர்.எஸ் பெற்றாலும், தன் இலக்கான ஐ.ஏ.எஸ் பெற தொடர்ந்து முயன்றார். மூன்றாவது முயற்சியில், இந்திய அளவில் இப்போது இரண்டாவது இடம் பெற்றிருக்கிறார்.

மூன்றாவது இடம்பிடித்த காமினி சிங்லா, பஞ்சாபைச் சேர்ந்தவர். 2020-ம் ஆண்டிலிருந்து யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருபவருக்கு, இது இரண்டாவது முயற்சியிலேயே கிடைத்திருக்கும் வெற்றி. தமிழக அளவில் முதலிடம் பெற்ற கோவை பெண் சுவாதி , இந்திய அளவில் 42-வது ரேங்க் எடுத்திருக்கிறார். தன் மூன்றாவது முயற்சியை திருவினையாக்கியிருக்கிறார்.

இந்த நான்கு பெண்களும் பகிர்ந்துள்ள வெற்றி வார்த்தைகளில் பொதுவானவை: ‘இந்தப் பயணத்தில் என் பெற்றோரும் குடும்பமும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.’ பெண் கல்வியைக் காப்பாற்ற, ஊக்குவிக்க, அதிகரிக்க, ஆதரிக்க என இன்றளவும் வலிமையான அரசு திட்டங்களும், சமூகத் திட்டங்களும் தேவைப்படும் நம் நாட்டில், குடிமைப் பணி தேர்வில் தேசத்தின் முதல் மூன்று அரியணைகளை அலங்கரிக்க தங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கம் கொடுத்து அனுப்பி வைத்திருக்கும் அந்தக் குடும்பங்களுக்கு வாழ்த்துகள்.

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் நாட்டிலேயே பெண்கள் முதலிடம் பிடிப்பது இது முதல்முறையல்ல. குறிப்பாக, 2010-ம் ஆண்டு நடந்த தேர்வுகளில், தமிழகத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி முதலிடத்தைப் பிடித்துப் பெருமை சேர்த்தார். தற்போது, அவர் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவராகப் பணியாற்றிவருகிறார்.

இன்று ஏழைக் குடும்பங்கள், கிராமத்துக் குடும்பங்கள் வரை பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். என்றாலும், உயர்கல்விக்கு, மேற்படிப்புக்கு, போட்டித் தேர்வுகள் ஆண்டுக்கணக்கில் எடுத்துக்கொள்ளும் கால அவகாசத்துக்கு, தங்கள் பெற்றோரிடம் அனுமதி கேட்டு மருகும், போராடும் இளம்பெண்கள் பலர். `பெண் பிள்ளைக்கு பெரிய படிப்பெல்லாம் தேவை யில்லை’, `படிப்புக்கு செலவழிக்கும் காசை கல்யாணத்துக்கு சேர்த்து வைக்கலாம்’, `திருமண வயது தாண்டிவிடக் கூடாது’ என இதுபோல இன்னும் பல பாலின பாகுபாடு சிந்தனைகள் நம் குடும்பங்களில் நிறைந்துள்ளன. நம் மனதை களை எடுத்து, மகள்களை மாபெரும் சபைகளுக்கு அனுப்பி வைப்போம் மனதார.

இன்னொரு பக்கம், 100% திறன் அடிப்படையிலான இந்தத் தேர்வில், ஆண்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்று சென்றாலும், குடிமைப் பணிகளில் பெண்களுக்கு ‘சாஃப்ட் போஸ்டிங்’களே பெரும்பாலும் கொடுக்கப்படுகின்றன என்கிறார்கள், இத்துறையில் உள்ள சீனியர் பெண் அதிகாரிகள். உடைக்கப்பட வேண்டிய கதவுகள் அதிகம்தான். உளிகளை நம் பெண் பிள்ளைகளின் கைகளில் கொடுத்து அனுப்புவோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism