Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

சாதிக்காக குடும்பங்களே பெற்ற பிள்ளைகளைச் செய்யும் கொலைகளை ‘கௌரவக்கொலை’ என்பதில் இருந்து ‘ஆணவக்கொலை’ என்று வார்த்தை மாற்றம் செய்திருக்கிறோமே தவிர, அந்தக் குரூர மனங்களை நம்மால் இன்னும் மாற்ற முடியவில்லை. சமீபத்திய பலி, புதுமணத் தம்பதியான சரண்யா மற்றும் மோகன்.

பட்டியலின சாதியைச் சேர்ந்த சரண்யா, கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யா கோயில் தெருவைச் சேர்ந்தவர். பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மோகன், திருவண்ணாமலை மாவட்டம், பொன்னூரைச் சேர்ந்தவர். செவிலியர்களான இருவரும் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள். வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், சமீபத்தில் சென்னையில் காதல் திருமணம் முடித்தனர்.

சரண்யாவை, ‘விருந்துக்கு வாருங்கள்’ என்று அவரின் குடும்பம் வீட்டுக்கு அழைக்க, புதுமணத் தம்பதி சென்றனர். சரண்யா வீட்டு வாசலில் வைத்தே அவரையும் மோகனையும் ஆணவப்படுகொலை செய்திருக்கிறார், சரண்யாவின் அண்ணன் தன் மைத்துனருடன் இணைந்து. திருமணமான ஐந்தே நாள்களில் புதுமணத்தம்பதியை சடலமாக்கிவிட்டது சாதிவெறி.

`ஒடுக்கப்பட்ட சாதி’, `பிற்படுத்தப்பட்ட சாதி’ என்ற வார்த்தைகளும், ‘உயர்ந்த சாதி’ என்ற வார்த்தையுமே சொல்லிவிடுகின்றன மொத்த அரசியலையும். `உயர்ந்த’வர்களால் `நீ எனக்குக் கீழே இரு’ என்று வைக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காக, விடுதலைக்காக, இட ஒதுக்கீட்டுக்காக, அரசியல் பங்கீட்டுக்காக எனப் பல நூற்றாண்டுகளாகப் பல தரப்பினரும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகள் தங்கள் `சாதித் தூய்மை’க்காக, பெற்ற பிள்ளைகளையே கொலைசெய்து வருகிறார்கள் இன்றுவரை என்பது பெருங்கொடுமை.

உடன்கட்டை ஏறும் ‘சதி’யை ஒழித்ததுபோல, சுவடில்லாமல் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டிய சமூகக் கொடுமை, அவலம், அவமானம்... ஆணவக்கொலை. ஆனால், ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் கோரும் அளவுக்கு, அது இப்போது அதிகரித்து வருவது அதிர்ச்சிக்குரியது, ஆபத்தானது. 2019-ம் ஆண்டு ‘எவிடன்ஸ்’ அமைப்பு தன் அறிக்கையில், தமிழகத்தில் 2012 - 2017 காலகட்டத்தில் மட்டும் 157 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாகத் தெரிவித்தது.

நிதர்சனம் இதுதான். சொல்லப்போனால், முந்தைய தலைமுறையைவிட இந்தத் தலைமுறைக்கு சாதிக்காக ஒருங்கிணையும், சாதியை வளர்க்கும் வாய்ப்புகளை மிக அதிகமாக உருவாக்கிக்கொடுக்கின்றன சமூக வலைதளங்கள். சாதியை வைத்து ஆதாயம் தேடும் தலைவர்கள், சாதிக்கென வாட்ஸ்அப் குழுக்கள், முகநூல் பக்கங்கள், யூடியூபில் சாதித்திமிர் துள்ளலுடன் வீடியோக்கள் என இங்கெல்லாம், நம் பிள்ளைகள் எரிய எண்ணெய் ஊற்றுகிறார்கள். 31 வயதாகும் சரண்யாவின் அண்ணன் இன்று கொலைகாரராகி இருக்கிறார்.

ஆணவக்கொலைகளுக்கு மகள்களை பலிகொடுக்கும் குடும்பங்கள் கொடூரம் என்றால், இன்று பெரும்பாலான குடும்பங்கள், சாதி வளர்க்க அறிந்தும் அறியாமலும் தங்கள் மகன்களைப் பலிகொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது அவலம். படிப்பை கொடுத்தால், உழைப்பை பழக்கினால் நம் பிள்ளைகள் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால், விஷமான சாதி அவர்கள் மனங்களில் பரவுவது, அவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு பின்னடைவையே தரும் என்பதுடன், என்றேனும் ஒருநாள் அவர்களை குற்றவாளியாகவும் நிறுத்தலாம்.

சாதிவெறி நீக்கம் செய்து வளர்ப்போம் தோழிகளே நம் பிள்ளைகளை!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism