Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்களான இரு பெண்கள், தாங்கள் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூற, பெற்றோர்கள் மட்டுமல்ல, ஊரே கொந்தளித்தது. இறுதியில் வேறு வழி தெரியாமல், அந்தப் பெண்களில் ஒருவர் தன்னை ஆணாக பால் மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டுள்ளார். தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய புரிந்துணர்வு இல்லாத சமூகமும் குடும்பமும் அந்த இளம் பெண்ணின் உடலின் மீது, அந்தப் பெண்களின் அன்பின் மீது நிகழ்த்தியுள்ள கொடூரமான வன்முறை இது.

எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரை (LGBTQ - Lesbian, Gay, Bisexual, Transgender, Queer) நாம் புரிந்துகொள்வது இரண்டாவது நிலை. முன்னதாக, அவர்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு, அவர்களைப் பற்றிய விளக்கங்கள், கலந்துரையாடல்கள், நிகழ்வுகள் பொது வெளிகளில் புழங்க வேண்டும்.

லெஸ்பியன் (L) என்பவர், பெண்மீது பால்ஈர்ப்புக்கு உட்படுகிற மற்றொரு பெண். கே (G) என்பவர், ஆண்மீது பால்ஈர்ப்புக்கு உட்படுகிற மற்றொரு ஆண். பைசெக்‌ஷுவல் (B) என்பவர் ஆண், பெண் இருவர்மீதும் பால்ஈர்ப்புக்கு உட்படுகிறவர். டிரான்ஸ்ஜெண்டர் (T) என்பவர், தன் உடல்ரீதியான பாலினத்துக்கு எதிரான பாலினத்தவராகத் தன்னை உணரும் திருநர். க்யூயர் (Q) என்பது, வழக்கமான பாலினம், பால் ஈர்ப்புக்கு மாறானவர்களுக்கான தொகுப்புச் சொல். LGBTQ-க்கான அடிப்படை விளக்கமாக இதைக் கொள்ளலாம்.

இப்படி அவர்களை அறிந்துகொண்ட பின்னர், அடுத்த நிலை அவர்களை நாம் புரிந்துகொள்வது. ஆண் - பெண் ஈர்ப்புபோலவே, அதற்கு மாறுபட்ட இந்த பால் ஈர்ப்புகளும் இயல்பானவை. இந்த உள்ளுணர்வு சம்பந்தப்பட்டவர்களின் பழக்கங்கள், விருப்பங்கள் உள்ளிட்ட புறக்காரணிகளால் உருவாவதோ, அவர்களாகவே தேர்ந்தெடுப்பதோ அல்ல. அது அவர்களது ஜீன் கூறுகளிலேயே உள்ளது. அதனாலேயே, அவர்களது இந்த உள்ளுணர்வை மாற்றுவதும் சாத்தியமற்றது.

தன்பாலின உறவு குற்றம் என்ற 377-வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்து, அது சட்டப்படி குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்தது. 2021-ம் ஆண்டு, தன்பாலின ஈர்ப்பாளர்கள் வழக்கு ஒன்றில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த உறவு குறித்த புரிந்துணர்வுக்கு உளவியலாளரிடம் தான் ஆலோசனை பெற்ற பிறகே தீர்ப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, தானும் தன்பால் ஈர்ப்பாளர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாத பெரும்பான்மையினரில் ஒருவராக இருந்ததாகவும், தற்போது புரிந்துகொண்டதாகவும், அவர்களின் காதலை உடல்தேவையாக மட்டுமே அணுகுவது தவறு என்றும் விவரித்து, மாற வேண்டியது சமூகம்தான் என்றும் கூறி, அந்தப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்து தீர்ப்பளித்தார். சென்ற மாதம் கேரள உயர் நீதிமன்றம், தன்பாலின ஈர்ப்பாளர் ஜோடியான இரண்டு பெண்கள் சேர்ந்து வாழத் தடையில்லை எனத் தீர்ப்பளித்ததும் குறிப்பிடத்தக்கது.

LGBTQ ஆக இருப்பதும் இயற்கையின் ஏற்பாடே! மனதில் எப்போதும் நியாயத் தராசுடனேயே இருக்கும் நம்மில் பலர், நமக்குள் இருக்கும் நீதிபதிக்கும் இதைப் புரியவைப்போம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்.