Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

ஆசிரியர் பக்கம்

நமக்குள்ளே...

ஆசிரியர் பக்கம்

Published:Updated:
நமக்குள்ளே...

ஆண்களைச் சார்ந்தே பெண்களை இயங்க வைக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்று, பெயரின் முன்னெழுத்தான இனிஷியல். ஒரு பெண் இன்னாரது மகளாக இருக்க வேண்டும், அல்லது இன்னாரது மனைவியாக இருக்க வேண்டும் என்பதை, அவள் பெயருடனேயே ஒட்டிவைக்கும் சட்டரீதியான வழக்கம் இது. திருமணத்துக்குப் பிறகு, தன் இனிஷியலை மாற்ற விரும்பாமல் எப்போதும்போல தொடர விரும்புவது முதல், விவாகரத்துக்குப் பிறகு கணவரின் இனிஷியலை மாற்றுவது வரை... சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஆவணங்கள் தொடர்பான நடைமுறைகளில் உள்ள சட்ட சிக்கல்கள் பல.

ஆணாதிக்க சமுதாயத்தின் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்ட வழக்கங்களுக்கு சட்டமும் அங்கீகாரம் தரும்போது, அதில் மாற்றங்கள் ஏற்படுவது கடினமானதாகிவிடும். அப்படி ஒன்றுதான், பெண்களை எப்போதும் அப்பாவை, கணவரை சார்ந்தே அடையாளப்படுத்தும் இனிஷியலும். ஆனால், இப்போது இந்த இனிஷியல் விஷயம் சார்ந்த வழக்குகளில் சில தீர்ப்புகள் பெண்களுக்கு சாதகமாக வழங்கப்படுவது, இதிலுள்ள சட்ட இறுக்கத்தை விலக்குகிறது.

அந்த வகையில், சமீபத்திய வழக்கு ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம், `திருமணமாகாத தாய் மற்றும் பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், சமூகத்தில் தனிநபர் உரிமை, மரியாதை, கண்ணியத்துடன் வாழ வழி செய்யும் வகையில், அவர்களது சான்றிதழ்களில் தாயின் பெயரை மட்டும் குறிப்பிடலாம், தந்தை பெயர் தேவையில்லை’ என்று கூறி அனுமதி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு கொடுத்திருப்பது இரண்டு பெரிய உரிமைகள். முதலாவது, அப்பாவின் பெயரை பயன்படுத்தும் அனுமதியற்ற சூழலில் உள்ள பிள்ளைகளுக்கு, ‘அதனால் மற்றவர்களுக்கு

நீ எந்த விதத்திலும் குறைந்தவன் இல்லை’ என்று சட்டரீதியான அங்கீகாரம் கொடுத்து தட்டிக்கொடுத்து அனுப்பும் அக்கறை. இரண்டாவது, ஒரு பெண் தன் பிள்ளையின் இனிஷியலுக்காக ஓர் ஆணின் அனுமதி வேண்டி நிற்க வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை.

மேலும், உச்ச நீதிமன்றம் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில், `கணவரின் மறைவுக்குப் பிறகு மறுமணம் செய்துகொண்ட பெண், தன் குழந்தையின் பெயருடன், தான் மறுமணம் செய்துகொண்ட கணவரின் குடும்பப் பெயரை (Surname), தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளலாம்' என்று உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய காலகட்டத்தில் கோப்பு ரீதியான காரணங்களுக்காக ஆணின் பெயர் (மட்டுமே) இனிஷியல் ஆக்கப்பட்டதையும், அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்ததன் நடைமுறை அவசியத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கால மாற்றத்தில், நூற்றாண்டுகள் வயதாகும் சட்டத்தில் தேவைப்படும் பல திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 2003-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, ‘தாயின் பெயரையும் குழந்தைக்கு இனிஷியலாகச் சேர்த்துக்கொள்ளலாம்’ என்று அரசாணை வெளியிட்டது முதல் 2021-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம், ‘குழந்தை தன் விருப்பப்படி தந்தை அல்லது தாய் பெயரை இனிஷியலாகப் பயன்படுத்த உரிமை உள்ளது’ என்று உத்தரவிட்டது வரை, சட்டம் காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டியது என்பதை உறுதிப்படுத்துகிறது.

பெண்களுக்கு சார்பின்மையை, தற்சார்பை உறுதிசெய்துகொடுக்கும் சட்ட மாற்றங்கள் தொடரட்டும் தோழிகளே!