Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

ஒரு திசையிலிருந்து வரும் ஒளி, மற்ற திசைகளுக்கும் அது படர்தலுக்கான நம்பிக்கையைக் கொடுக்கக் கூடியது. அப்படித்தான் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன, டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகள். சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று பார்வையிட்டதுடன், ‘தமிழகத்திலும் டெல்லி மாடல் அரசுப் பள்ளிகள் போல அமைக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார். அந்தளவுக்கு அந்தப் பள்ளிகளின் தரம் உயர்த்திக் காட்டியிருப்பவர்... அதிஷி மர்லேனா என்ற செயல் புயல் பெண்.

2015-ம் ஆண்டிலிருந்து டெல்லி அரசு, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளுக்குப் பின் மூளையாக இயங்கி வரும் அதிஷி, கல்வி ஆராய்ச்சியாளர். ஆரம்பத்தில் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து, பின்னர் ஆம் ஆத்மி கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்ட அதிஷிக்கு தேசிய செயற்குழு ஆலோசகர் முதல் துணை முதல்வர் வரை, கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. அவற்றில் அதிஷியின் முகமாகக் கொண்டாடப்படுவது, டெல்லியின் முகமாக அவர் மாற்றியுள்ள அரசுப் பள்ளிகள்.

டெல்லி அரசின் மொத்த மாநில பட்ஜெட்டில் 24% கல்விக்கு ஒதுக்கவைத்து, அரசுப் பள்ளிகளின் கட்டுமானங்கள் முதல் தொழில்நுட்பங்கள் வரை தனியார் பள்ளிகளுக்கு இணையாகக் கொண்டுவந்தார் அதிஷி. மாணவர்களின் கற்றலை மேம்படுத்த தினமும் மூன்று மணி நேர சிறப்பு வகுப்புகளை ஏற்படுத்தினார். நர்சரி முதல் எட்டாம் வகுப்புவரை ‘மகிழ்ச்சி’ பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு, மாணவர்களின் வளர்ச்சியை ‘மகிழ்ச்சி குறியீடு’ மூலம் பதிவு செய்ய வைத்தார். தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி வரவைத்தார்.

அதிக எண்ணிக்கையிலான பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புகளை நடத்தினார் அதிஷி. 300 அரசுப் பள்ளி முதல்வர்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கும், 100 ஆசிரியர்களை ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கும், 200 ஆசிரியர்களை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துக்கும் என அனுப்பி பட்டைதீட்டினார் அதிஷி. அவர்களைக்கொண்டு டெல்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 25,000 பேரை பட்டை தீட்டினார். அரசுப் பள்ளிகளின் ஆன்மாவாக இருக்க வேண்டிய ஆசிரியர்களை, ஒரு கல்வி சீர்திருத்தத்துக்கு மனதளவிலும் செயலளவிலும் தயார்படுத்தியது, அதிஷியின் மிகப்பெரிய வெற்றி.

நாட்டிலேயே, சி.பி.எஸ்.இ பாடத்திட்டப்படி தேர்வு எழுதும் மாநில அரசுப் பள்ளிகள், டெல்லி மாநில அரசுப் பள்ளிகள்தான் என்ற தனித்துவ பெருமைக்கும் சாதனைக்கும் அவற்றை கொண்டுவந்து நிறுத்தினார். 2020-ல் அதன் தேர்ச்சி சதவிகிதம் 99%. சென்ற ஆண்டு IIT, JEE தேர்வுகளில் வெற்றிபெற்ற டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1012. தற்போது அதிஷி, தெற்கு டெல்லியின் கல்காஜி தொகுதியின் எம்.எல்.ஏ.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது என்பது, பொருளாதார நிலையில் கடைசிப் படிகளில் நிற்கும் எளிய குடும்பத்து மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் எதிர்காலத்தை உறுதி செய்துகொடுக்கும் முக்கிய முன்னெடுப்பு. அதிஷியும், டெல்லி அரசும் அந்த நோக்கத்தில் தீர்க்கத்துடன் உழைத்ததால், இன்று வெற்றி அறுவடை ஆரம்பமாகியிருக்கிறது. கல்வி சீரமைப்புக்கு, அதிஷி போன்ற திறமையாளர்களைக் கண்டடைந்து, கைகோத்து அனைத்து மாநில அரசுகளும் செயல்பட்டால், வெற்றி நிச்சயம்தானே தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism