தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

தலையங்கம்

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயதுப் பெண் நேஹா, தன் வீட்டின் மாலை நேர பூஜைக்கு ஜீன்ஸ் - டாப் அணிந்து வந்து வணங்கினார். அவரின் தாத்தா, பாட்டி அவர் உடை குறித்துக் கண்டிக்க, அணிவதற்காகத்தான் ஜீன்ஸ் உருவாக்கப்படுகிறது என்றார் நேஹா. சித்தப்பாக்கள், சித்திகள் என்று அனைவரும் நேஹாவுக்கு எதிராகப் பேச, அந்த விவாதம் சூடாக, நேஹா குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்பட்டார்.

சம்பவத்தன்று, கூலித்தொழிலாளியான நேஹாவின் அப்பா வெளியூரில் இருக்க, சுயநினைவின்றி சாய்ந்த நேஹாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தூக்கிச் சென்றனர் அவர் குடும்பத்தினர். ஆனால், மறுநாள் தங்கள் கிராமத்தில் உள்ள பாலத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் தன் மகள் என்று கதறுகிறார் நேஹாவின் அம்மா. தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் நேஹா உயிரிழந்திருக்கிறார் என்கிறது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை. கொலை மற்றும் தடயங்களை அழித்தல் பிரிவில் கீழ் நேஹா குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பெண்கள் ஆணையத்தில் 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை பதிவான குடும்ப வன்முறை புகார்களின் எண்ணிக்கை 2,300. கடந்த 21 வருடங்களில் இதுதான் அதிகபட்ச எண்ணிக்கை என்று சுட்டிக்காட்டுகிறது அவ்வாணையம். இன்னொரு பக்கம் தேசிய குடும்பநல ஆய்வு (National Family Health Survey), குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் 70 சதவிகிதம் பேர் அதை யாரிடமும் பகிர்ந்துகொள்வதுகூட இல்லை என்கிறது.

நமக்குள்ளே...
நமக்குள்ளே...

‘நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை...’ என்கிறோம். வீட்டிலேயே அது இல்லை என்பது எத்துணை துயரம், அவலம்? பெண் சிசுக்கொலைகள், ஆணவக் கொலைகள், வரதட்சணைக் கொலைகள், உறவுச்சிக்கல் கொலைகள்... பெண்களைத்தான் எத்தனை எத்தனை வகைகளில் கொலை செய்கின்றன குடும்பங்கள்? பெண்கள் பலரையும் கொலை செய்து தெய்வங்களாக்கிய கதைகள் போதாதென்று, ரத்தப்பசி கொண்டு இன்றும் நேஹாக்களை கொலை செய்துகொண்டேதான் இருக்கின்றன குடும்பங்கள். எனில், ‘இந்தியாவின் பெருமை அதன் குடும்ப அமைப்பே’ என்று முழங்கப்படுவது இந்தியப் பெண்களின் ஊமைக்காயங்களின் மீது எழுதப்படும் பொய்மைதானே தோழிகளே?

தன் ஆடை சுதந்திரத்துக்கு, படிப்பு, வேலை, திருமண விருப்பங்களுக்கு, சுயசார்பு வேட்கைக்கு முனையும் பெண்கள், அவர்களின் அந்த முடிவுகளுக்காகப் பெற்றோர், புகுந்த வீட்டினரால் நான்கு சுவர்களுக்குள் உடல், மன வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது ஒருபக்கம். குடிகாரக் கணவர், சந்தேக புத்தி, தாழ்வுமனப்பான்மை போன்ற குணக்கோணல்கள் கொண்ட கணவர், ஆண்பிள்ளை கேட்கும் கணவர், வரதட்சணை பேராசை கொண்ட புகுந்த வீட்டினர் என இவர்களிடம் எல்லாம், பெண்ணாகப் பிறந்ததாலேயே அடியும், ரத்தக்கட்டுகளும், குருதிப்புனல் காயங்களுமாக வாழ்ந்துகொண்டிருக்கும் சகோதரிகள் ஒருபக்கம். உயிர்போனால் ஒருவேளை செய்தியாகலாம். மற்றபடி பிற குற்றங்களை எல்லாம் பெண் தன் கண்ணீரிலேயே கழுவிக் கரைத்து குற்றவாளிக் குடும்பங்களைக் காப்பாற்றிவிடுவாள் என்பதுதானே அவர்கள் நம்பிக்கை? அதை உடைப்போம் தோழிகளே.

பெண்களுக்கான அவசரகால உதவிக்கான தேசிய ஹெல்ப்லைன் எண் 1091 (தமிழில் சேவை); தேசிய பெண்கள் ஆணையத்தின் ஹெல்ப்லைன் எண் 7827 170 170 (இந்தி, ஆங்கிலத்தில் சேவை) - அலைபேசியில் பதிவோம், பகிர்வோம்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்