ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

ஆசிரியர் பக்கம்

இந்திய பங்குச் சந்தையில் இடம்பெற்றிருக்கும் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் (Board Of Directors) பெண்களின் பிரதிநிதித்துவம் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று சொல்லும் இ.ஒய் (EY - Ernst &Young) நிறுவனத்தின் அறிக்கை, மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

இயக்குநர்கள் குழுவில் 2013-ம் ஆண்டு 6% ஆக இருந்த பெண்களின் பிரதிநிதித்துவம், 2022-ல் 18% ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், இயக்குநர்கள் குழுவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் கட்டாயமாக்கிய இந்திய கார்ப்பரேட் சட்டம்தான். பெண் இயக்குநர்களுக்குப் பூட்டப்பட்டிருந்த போர்டு மீட்டிங் அறைகளின் இரும்புக்கதவுகள் திறக்கப்பட்டு, அவர்களுக்கான நாற்காலிகள் இந்த சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

நிஃப்டியில் (NIFTY 500 companies) பட்டியலிடப்பட்டிருக்கும் பல துறை தொழில்நிறுவனங்களில், 95% நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் பெண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். டெக்னாலஜி துறையில் 34%, உயிர் அறிவியல் துறையில் 24%, மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையில் 23% என்று இந்த சதவிகிதம் ஏற்றம் கண்டுவருகிறது.

இதை உற்றுநோக்கிவரும் சர்வதேச உழைப்பாளர் நிறுவனம் (International Labour Organization - ILO), ‘பணியிடங்களில் பெண்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது, இந்தியாவின் ஜி.டி.பி (Gross Domestic Product - GDP) வளர்ச்சியை மேலும் அதிகமாக்கும். இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சியானது 2025-ம் ஆண்டில் 4,507 டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 700 பில்லியன் டாலர், பெண்களையும் இணைத்துக்கொள்வதால் கிடைக்கக்கூடிய வளர்ச்சியாக இருக்கும். இதன் மூலம், ஜி.டி.பி-யானது 7.5%ல் இருந்து 9% ஆக உயரும்’ என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நமக்குள்ளே...

எந்தத் துறையாக இருந்தாலும், எந்த நிறுவனமாக இருந்தாலும், பெண்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வருவதற்கு தீவிரமான உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால், திருமணம், குழந்தை பிறப்பு என இந்தச் சுழற்சியில் பெரும்பாலான பெண்களுக்கு அவர்களது வேகம் தடைபட்டு மீள்கிறது. சிலருக்கு, ஊதிய பாகுபாடு முதல் பாலியல் பிரச்னைகள் வரை பணியிடத்தில் அவர்களது கிராபை தொந்தரவு செய்கிறது.

இந்தச் சிக்கல்களை எல்லாம் தாண்டி, மன திடத்துடன் பெண்கள் தலைமையை நோக்கி நகர வேண்டும். அப்படி நகர்ந்த பெண்கள், நமக்கான நம்பிக்கையைக் கொடுக்கிறார்கள். இந்திரா நூயி, தான் பெப்சிகோ நிறுவனத்தின் பிரசிடென்ட்டாக அறிவிக்கப்பட்ட இரவு, அவர் அம்மா அவரை பால் பாக்கெட் வாங்கிவரச் சொன்னதைப் பகிர்ந்திருந்தார். பால் பாக்கெட் கதைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

தனியார் நிறுவனங்களை ஒப்பிடும்போது, அரசுத்துறைகளில் பெண்களுக்கான போராட்டம் பெரும்போராட்டமாகவே இருக்கிறது. சமீபத்தில்கூட, ‘சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகளில் தலைமை தேர்தல் ஆணையராக ஒரு பெண்ணை தேர்வு செய்ய இயலவில்லையா?’ என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பியிருப்பதே இதற்கு சாட்சி. இதுபோன்ற கேள்விகளும் போராட்டங்களும் அரசு இயந்திரக் கதவுகளையும் திறப்பதற்கான நகர்வாக அமையும் என்று நம்புவோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்.