Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

ஒன்றிய அரசு, ‘திருமண வல்லுறவை குற்றமயமாக்குவது குடும்ப அமைப்பையே குலைப்பதாக அமையலாம்’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நமக்குள்ளே...

ஒன்றிய அரசு, ‘திருமண வல்லுறவை குற்றமயமாக்குவது குடும்ப அமைப்பையே குலைப்பதாக அமையலாம்’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய பாலுறவை (Marital Rape) உலகின் பல நாடுகள் சட்டப்படி குற்றமாக அறிவித்துவிட்டன. 1922-ம் ஆண்டு சோவியத் யூனியன் (ரஷ்யா) திருமண வல்லுறவை குற்றமாக்கும் சட்டத்திருத்தத்தை மேற்கொண்டதில் இருந்து, இந்த 2022-ம் ஆண்டு வரை, அதாவது நூறாண்டுகளில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் இருந்து தென்னாப்பிரிக்கா, கியூபா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் வரை அந்தப் பட்டியலில் தங்களை இணைத்துக்கொண்டுவிட்டன. ஆனால், மனைவி கட்டாய வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதைக் குற்றமயமாக்காது உலகில் எஞ்சியிருக்கும் 30 நாடுகளில் ஒன்றாக இருக்கிறது இந்தியா.

இந்தியாவில், திருமண வல்லுறவு தொடர்பான வழக்குகளில் எல்லாம், மாநிலத்துக்கு மாநிலம், நீதிமன்றத்துக்கு நீதிமன்றம், ‘குற்றம்’, ‘குற்றமல்ல’ என மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் அனைத்திந்திய ஜனநாயகப் பெண்கள் சங்கம் உள்ளிட்ட சில மனுதாரர்களால், திருமண வல்லுறவை சட்டப்படி குற்றமாக்க வேண்டி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளுமே, ‘குற்றம்’, ‘குற்றமல்ல’ என ஒருவருக்கொருவர் முரண்பட்ட தீர்ப்பை வழங்க, மனு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படவிருக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 375, ஓர் ஆண், பெண்ணின் விருப்பமின்றி பாலுறவு கொள்வதைப் பாலியல் வன்கொடுமை (Rape) என்று குற்றப்படுத்துகிறது. ஆனால் அதில், ‘அதுவே மனைவியின் வயது 18 வயதுக்கு மேல் என்றால் அது பாலியல் கொடுமை ஆகாது’ என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் அடிப்படை உரிமைக்கு எதிரான இந்த விலக்கை எதிர்த்துதான் குரல்கள், போராட்டங்கள், வழக்குகள், நீதிமன்றத்தில் மனுக்கள் எனத் தொடர்ந்து வருகின்றன.

டெல்லி உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையில், டெல்லி அரசு மற்றும் ஒன்றிய அரசு, ‘சமூகச் சிக்கல்கள் இருக்கும் இந்தப் பிரச்னையில் மக்களின் பெரும்பான்மை கருத்துப்படியே முடிவெடுக்க முடியும்’ என்று தெரிவித்தன. இன்னொரு பக்கம், திருமண வல்லுறவு, சட்டப்படி இந்தியாவில் குற்றம் இல்லை என்பதால், தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் இது குறித்த தனித்த தரவுகள் எதுவுமே இல்லை.

ஒன்றிய அரசு, ‘திருமண வல்லுறவை குற்றமயமாக்குவது குடும்ப அமைப்பையே குலைப்பதாக அமையலாம்’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. வழக்கம்போல, ‘குடும்பத்தைக் கொண்டுசெல்ல பெண்கள்தான் இந்தத் தியாகத்தை செய்ய வேண்டும்’ என்பதை சுற்றி வளைத்துச் சொல்லும் இந்த வார்த்தைகளை மதக்குழுக்கள் உட்பட சில தரப்பினர் வரவேற்றனர். ‘கணவரை தண்டிக்க இதை மனைவி ஆயுதமாகப் பயன்படுத்தலாம்’ என்ற பழைய வாதங்களும் தொடர்ந்து கொண்டிருக் கின்றன.

‘மனைவியின் உடல் கணவனின் உடைமை’ என்ற பிற்போக்குத்தனத்தைப் பத்திரமாக அடைகாத்துவரும்160 வருடங்கள் பழைமையான இந்தச் சட்டப் பிரிவில் திருத்தம் செய்ய, இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படப்போகிறது இந்தியாவுக்கு?

சட்டம் வரும்வரை நாம் சொல்லப் பழகுவோம், சக பெண்கள் சொல்வதற்கு தைரியம் கொடுப்போம் தோழிகளே: No means no!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism