Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

இன்று பெண்களின் பொறுப்பு, அம்மாக்களாக இருப்பது மட்டுமல்ல. கடைநிலை ஊழியர் முதல் சிஇஓ பொறுப்பு வரை சுழன்றுகொண்டிருக்கிறார்கள் மாடர்ன் டே மாம்கள். இன்னொரு பக்கம், 20-ம் நூற்றாண்டு அம்மாக்களுக்கு செய்தது போலவே, 21-ம் நூற்றாண்டு அம்மாக்களை ஜட்ஜ் செய்வதையும் சமூகம் சுறுசுறுப்பு குறையாமல் செய்துகொண்டே இருக்கிறது.

பேறுகால விடுப்பு முடிந்து வேலைக்குத் திரும்பும் பெண்ணிடம், ‘பால் குடிக்கும் பிள்ளையை விட்டுவிட்டா?' என்கிறது. பணி உயர்வு பெற்றுக்கொண்டு வரும் பெண்ணிடம், ‘பள்ளியிலிருந்து குழந்தைகள் திரும்பும் நேரம் வீட்டில் இல்லாத அம்மாதானே நீ?’ என்கிறது. பணியிடத்தில், தொழிலில் தன் பல வருட உழைப்பின் பலனாகத் தலைமைப் பொறுப்புக்கு, வெற்றி நாற்காலிக்கு வரும் பெண்ணிடம், ‘என்ன சம்பாதித்து என்ன... நீ பிள்ளைகளை வீட்டிலிருந்து பார்த்துக்கொள்ளவில்லை’ என்கிறது.

இந்த வார்த்தைகள் தரும் வலியையும், குற்ற உணர்வையும் செரித்து கடந்து, தங்கள் கரியரில் தொடர்ந்து பயணிக்கும் பெண்கள் பலரை பார்க்கிறோம். ஆனால் இன்னொரு பக்கம், தன் தாய்மை எப்போதும் ஜட்ஜ் செய்யப்பட்டுக்கொண்டே இருப்பது தரும் மன உளைச்சலில், அம்மா கடமையா, வேலையா என்ற ஊசலாட்டத்தில், ‘நாம் நல்ல அம்மா இல்லையோ’ என்ற குழப்பத்தில்... வேலையை விடும் பெண்கள் இங்கே பலர்.

2018-ம் ஆண்டு, ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் ‘பணிக்குத் திரும்பும் அம்மாக்களின் இடர்ப்பாடுகள்’ ஆய்வு, இந்தியப் பெண்களில் 73% பேர் குழந்தைப் பேற்றின்போது வேலையைவிடுகிறார்கள்; 48% பேர் பிரசவம் முடிந்து பணிக்குத் திரும்பிய நான்கு மாத காலத்துக்குள் மீண்டும் பணிச்சூழலில் இருந்து விலகிவிடுகிறார்கள்; 50% பேர் 30 வயதுகளில் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக வேலையை விடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

குழந்தை வளர்ப்பு அம்மாக்களின் பொறுப்பு என்பது உண்மைதான் தோழிகளே. ஆனால், அது மட்டுமே நமக்கு வாழ்க்கை அல்ல. நமக்கு வேலையும் முக்கியம். பொருளாதார சார்பின்மையும் முக்கியம். பணிச்சூழலில் நம் திறன் வெளிப்படுவதும், அதனால் கிடைக்கும் அங்கீகாரமும், அது தரும் தன்னம்பிக்கை, சந்தோஷமும் முக்கியம். நம் அம்மாக்கள் போல, வீடே உலகம் என்று வாழத் தேவையில்லை நாம். வீட்டுக்கு வெளியே உள்ள உலகம் நமக்கும்தான்.

டே கேரில் குழந்தையை விடுவது, வீட்டு வேலைகளுக்கு ஆள் வைத்துக்கொள்வது, பிள்ளைக்கு ஹோம் டியூஷன் ஏற்பாடு செய்வது என, சம்பாதிக்கும் தொகையில் ஒரு பகுதியை ஒதுக்கி நிலைமையைக் கையாள்வோம் தோழிகளே. எவ்வளவு நேரம் பிள்ளைகளுடன் செலவிடுகிறோம் என்பதைவிட, செலவிடும் நேரத்தை எப்படி முழுமையாக அவர்களுடன் செலவிடலாம் என்ற குவாலிட்டி டைம் > குவான்டிட்டி டைம் விதியைப் பின்பற்றுவோம்.

‘நீ நல்ல அம்மா’ என்ற சான்றிதழைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்கும்போதுதான், ‘நீ நல்ல அம்மாவா?’ என்ற கேள்வி நம்மைக் குடையும் தோழிகளே. உண்மையில், நாம் மிகச் சிறந்த அம்மா. ஆனால், அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை!

அன்னையர் தின வாழ்த்துகள்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism