Published:Updated:

நமக்குள்ளே...

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

தொலைக்காட்சியில் வெளியாகிக்கொண்டிருக்கும் ‘சர்வைவர்’ ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக ஒரு தீவுக்குச் சென்றிருந்த ‘வீஜே’ பார்வதி, தீவில் தான் தங்கியிருந்த நாள்களில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அதில் அவர் கறுத்துப் போயிருந்தார். இதைப் பார்த்ததுமே, ‘இதான் உன் உண்மையான நிறமா?’ என்று சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் ஆண் பிரபலம் ஒருவர், ‘மியா கலிஃபா மாதிரி போன, இப்போ மீன் விக்கிற பொம்பள மாதிரி வந்திருக்க’ என்று பார்வதியைக் கிண்டலடித்தார். பார்வதியும் சிரித்து அதை ஆமோதித்தார். கறுப்பு நிறம், நம் சமூகத்தில் இன்னமும்கூட எந்தளவுக்குக் கீழ்த்தரமானதாகப் பார்க்கப்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை வெளிச்சமிட்டிருக்கின்றன, இந்த நிகழ்வுகள்.

சில மாதங்களுக்கு முன்னர், இன்ஸ்டாகிராம் செயலியின் ‘பிளேக்ஃபேஸ்’ ஃபில்டர் இந்தியாவில் வைரல் ஆனது. அந்த வீடியோக்களில், பயனாளர்கள் முதலில் கறுப்பு நிறத்துடனும், அதனால் தங்கள் முகத்தை அருவருப்புடன் துடைப்பது, சோகமாக இருப்பது, ‘உவ்வேக்’ போன்ற முகபாவனைகள் காட்டுவது என்றும், பின்னர் ஃபில்டரால் தங்கள் நிறம் சிவப்பு ஆனதும் ‘வாவ்’ போன்ற மகிழ்ச்சி பாவனைகள் காட்டுவதுமாக இருக்க, இந்த நிறவெறி மனநிலைக்கு எதிராக எழுந்த கண்டனங்களால் அந்த ஃபில்டர் நீக்கப்பட்டது.

தலையங்கம்
தலையங்கம்

ஒருவர், தன் உருவ அமைப்பு / நிறத்துக்காகத் தன்னையே வெறுக்கும் அளவுக்கு இந்தச் சமூகம் காலம்காலமாகத் துரத்திக்கொண்டே இருக்கிறது. இந்த வன்கொடுமைக் குற்றத்தை நாளைய தலைமுறைக்கும் கடத்திக்கொண்டே இருக்கிறது.

உழைக்கும் வர்க்கத்தின் கறுப்பு, கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. சூரியனைத் தன் மீது காயப்போட்டுக்கொண்டு நித்தம் குனிந்து வயல்களில் வேலைபார்த்துக் கொட்டும் பெண்களின் முதுகில் அடர்ந்துபோயிருக்கும் கறுப்பு முதல் வீடுவிட்டு வெளிவந்து முகத்தில் வெயிலை வாங்கிக்கொண்டு விரைந்துகொண்டிருக்கும் சுயசம்பாத்திய பெண்களின் ‘டேன்’ வரை... உழைப்பின் கறுப்புக்கு உலகில் இணையில்லை.

சில ஆண்டுகளுக்கு முன், யுனிலீவர் நிறுவனம் தனது ‘ஃபேர் அண்ட் லவ்லி’ அழகு க்ரீமின் நிறத்தை ‘க்ளோ அண்ட் லவ்லி’ என்று மாற்றியது முதல் ஜான்சன் அண்ட் ஜான்சன் உட்பட பல நிறுவனங்களும் சிவப்பை அழகாக முன்னிறுத்தும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து விலகும் நிர்பந்தத்துக்கு ஆளாகியிருப்பதுவரை, நிறவெறிக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றிகளே!

போரைத் தொடர்வோம்.

அழகு சார் துறையின் மல்டி பில்லியன் டாலர் தொழில்களின் மூலதனமே, கறுப்பு நிறம் குறித்த தாழ்வுமனப்பான்மைதான். அதற்கான வேர் சிகிச்சை எளிமையானது தோழிகளே. அது, ‘நீ அற்புதமானவள்’ என்கிற நம்பிக்கையை ஒருவருக்கொருவர் தொடர்ந்து பகிர்ந்துகொண்டே இருப்பதுதான்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்