ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
News
நமக்குள்ளே...

தலையங்கம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கு ‘இரு விரல் பரிசோதனை’ செய்வது குற்றம் என்றும், அதைத் தடை செய்தும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் மருத்துவர் தன் இரண்டு விரல்கள் மூலம் பரிசோதித்து, ‘கன்னித்திரை’ என்று அழைக்கப்படும் ‘Hymen’ பாதிக்கப்பட்டிருக்கிறதா, `பெனட்ரேஷன்' (Penetration) நடந்திருக்கிறதா, அவர் பாலுறவுக்கு பழக்கப்பட்டவரா போன்றவற்றை அறிவதே இந்தப் பரிசோதனை. ஆனால், இது அறிவியல்பூர்வமற்றது. மேலும், ஏற்கெனவே பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு, பரிசோதனை என்ற பெயரில் இது தரும் மனரீதியான பாதிப்பு, கொடூரமானது.

பெண்களுக்கு விளையாட்டு, சைக்கிளிங் போன்ற செயல்களால் ‘ஹைமன்’ கிழிய வாய்ப்புள்ளது என்பதால், அந்தப் பரிசீலனையின் அடிப்படையில் முடிவுக்கு வருவது தவறு. மேலும், பிறப்புறுப்பில் தளர்வு இருந்தால், அவர் உறவுக்குப் பழக்கப்பட்டவர் என்றும், எனவே அவர் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டதில் குற்றத்தின் தன்மையைக் குறைத்தும் தீர்ப்புகள் எழுதப்பட்ட கொடுமை நடந்துள்ளன. கூடவே, திருமணமான/உறவில் இருக்கும் ஒரு பெண் வல்லுறவுக்கு ஆளாகும்போது இந்தப் பரிசோதனையின் அளவுகோல் என்ன? இப்படி, மருத்துவரீதியாகவும், அறம் அடிப்படையிலும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய இந்தப் பரிசோதனை, இன்றும் சட்ட ஆவணமாக ஆங்காங்கே மேற்கொள்ளப்படுவது கொடுமை. சென்ற வருடம் கோவை, விமானப்படை பயிற்சி மையத்தில் சக அதிகாரியால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் விமானப்படை அதிகாரிக்கு இரு விரல் பரிசோதனை செய்யப்பட்ட அதிர்ச்சி செய்தி நினைவிருக்கலாம்.

நமக்குள்ளே...

இந்நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தில் நடந்த பாலியல் மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி, பாலியல் புகார்களில் இரு விரல் பரிசோதனைக்கு தடை விதித்து, அதை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்யவும், மருத்துவப் பாடப் புத்தகங்களில் இதுகுறித்த தகவல்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. இது, தடை செய்யப்பட்டது குறித்த வழி காட்டுதல்களை அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்ப வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

2013-ம் ஆண்டு நிர்பயா வழக்கின்போதான நெறிப்படுத்துதலில் இரு விரல் பரிசோதனை தடை செய்யப்பட்டது. என்றாலும், இது நடைமுறையில் ஒழிக்கப்படாதது குறித்து பல விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடையும் தீர்ப்பும் மிகுந்த முக்கியத்துவமும் வரவேற்பும் பெற்றுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் துன்புறுத்தும் நடைமுறையைத் துடைத்தெறியவே 2022 ஆகி யிருக்கிறது நீதிக்கு(!). என்றாலும், சடங்குகள் முதல் சட்டங்கள் வரை ஆணாதிக்க அடக்குமுறைகளில் இருந்து பெண்களை மீட்கும் வழியில், எப்போதும் சிறு அடிகளை நம்பியே பெரும் பயணத்தைத் தொடங்கி வந்திருக்கிறோம். அந்த வகையில், இந்தத் தீர்ப்பும் தடையும் தந்திருக்கும் ஆசுவாசத்துடன் நடை தொடர்வோம் தோழிகளே!