லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
News
நமக்குள்ளே...

ஆசிரியர் பக்கம்

நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் பயணிக்கும் திட்டம், உழைக்கும் பெண்களின் பொருளாதாரத்தில் ஒரு மூச்சு ஆசுவாசம் தந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சைக்குரிய பேசுபொருளாகவே இருந்துவருவது வேதனைக்குரியது.

கேலிக்குரியதாக விமர்சிக்க ஆரம்பித்தவர்கள், ‘நாட்டின் பொருளாதார சுமை’ என்றும் ’அக்கறைப் பட்டார்கள்’. சக ஆண் பயணிகளும், நடத்துநர்களும் கட்டணமில்லாமல் பயணிக்கும் பெண்களை மரியாதைக்குறைவாக நடத்துவதாகப் புகார்கள் எழுந்தன. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும், அத்திட்டத்தை சுற்றும் முட்கொடிகளை, பெண்ணலச் செயற்பாட்டாளர்கள் தக்க பதிலுடனும், கண்டனங் களுடனும் பிடுங்கி எறிந்தபடி, ‘ரைட் ரைட் போகலாம்’ என்று பேருந்தை முன்னகர்த்தினார்கள் ஆனால், சக்கரத்தில் இப்போது மீண்டும் சில முண்டுக் கற்கள்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பெண்களுக்கான கட்டணமில்லா பயணத்தை ‘ஓசி’ என்று குறிப்பிட்டு சமீபத்தில் பேசியது பேரதிர்ச்சி. கண்டனத்துக்கு ஆளான பிறகும்கூட தன் பேச்சைத் திரும்பப்பெறாமல், ‘விளையாட்டா சொன்னேன்’ என்றுதான் கடந்திருக்கிறார் அமைச்சர்.

இன்னொரு பக்கம், இதை சந்தர்ப்ப அரசியலாக்கும் காட்சிகளும் நடந்தேறுகின்றன. `ஓசியில போக மாட்டேன், டிக்கெட் கொடு’ என்று பேருந்தில் பெண்கள் போர்க்குரல் கொடுக்கும் காணொளிகள் கொண்டு வரப்பட்டன’. தே.மு.தி.க கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த், `கட்டணமில்லா பேருந்து பயணத்தைப் பெண்கள் புறக்கணிக்க வேண்டும்’ என்று தன் பங்குக்குக் குரல் கொடுத்தார்.

சொற்ப ஆயிர கூலிக்கும், சம்பளத்துக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் பாதங்களுக்கு மாதம் தோராயமாக 1000 ரூபாய் மிச்சப்படுத்திக் கொடுக்கும் இந்தத் திட்டம், அவர்களுக்கான பொருளாதார ஆசுவாசம். படிப்பு முதல் வேலை வரை பெண்களின் நகர்வில் கட்டணம் என்ற சுமையை நீக்குவது, எதிர்கால சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடு. இதெல்லாம் தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் திட்டத்துக்கு எதிராகக் குரல்கொடுப்பதும், `இலவசத்தைப் புறக்கணியுங்கள்’ என்று தூண்டுவதும் பெண் முன்னேற்றத்துக்கு எதிரான ஒன்றே.

நாட்டில் கடைக்கோடி கவுன்சிலர்கள் தொடங்கி, ஜனாதிபதி வரை ஆயிரத்தெட்டு சலுகைகள் இருக்கின்றன. விமானப் பயணம், சொகுசு கார் என்று எண்ணற்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, லட்சங்களிலும் கோடிகளிலும் சம்பாதிக்கும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அள்ளி அள்ளி கொடுக்கப்படுகிறது. ஆனால், காலகாலமாக ஒடுக்கப்பட்டும், மிதிக்கப்பட்டும் கிடக்கும் பெண்ணினத்துக்கு... அதுவும் ‘நாம் ஒடுக்கப்பட்டிருக்கிறோம்.. மிதிக்கப்பட்டிருக்கிறோம்‘ என்பதைக்கூட இன்றளவிலும் உணரமுடியாதவர்களாக இருக்கும் பெண்ணினத்துக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து போன்ற சொற்ப விஷயங்களுக்கு எதிராக குரல்கள் ஒலிக்கின்றன.

இவையெல்லாம், சலுகைகள் அல்ல... பெண்களுக்கான உரிமைகள். பெண் என்பதற்காகவே காலகாலமாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த இனத்திடம் கோரப்படும் ‘பாவமன்னிப்பு’. முதலில் அறியாமையை நீக்கி, இது நமக்கான உரிமை என்பதை பெண்கள் அனைவரும் உணர வேண்டும். இந்த உரிமை உண்மை புரியாமல், ‘அய்யகோ... அரசாங்கப் பணம் பெண்களுக்காக செலவாகிறதே’ என்று கூச்சலிடும் ஆணாதிக்கவாதிகளுக்கும் உணர்த்த வேண்டும்.

அரசின் திட்டங்கள், சலுகைகள் அல்ல... நம் உரிமைகள் என்று உணர்வோம், உணர்த்துவோம், உரக்கச் சொல்வோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்