Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

தலையங்கம்...

நமக்குள்ளே...

தலையங்கம்...

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘பெண்கல்வியை ஊக்குவிக்க அரசு அறிவியல், கலைக் கல்லூரிகளில் காலையில் மாணவிகளுக்கும், மாலையில் மாணவர்களுக்கும் வகுப்பு நடத்த பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார். ஆண் - பெண் உறவுப் புரிதல் ஏற்கெனவே சிக்குக் கோலமாக இருக்கும் நம் சமூகத்தில், திராவிட மாடல் தி.மு.க அரசின் இந்த சிந்தனை, புள்ளியிலேயே களையப்பட வேண்டியது.

இருபாலர் பயிலும் பள்ளிகள், கல்லூரிகள்தான் குழந்தை உள்ளங்களிலும், பதின்ம மனங்களிலும் ஆண் - பெண் சமத்துவத்தை, எதிர்பாலினர் இருவரும் இயல்பாகப் பழகக்கூடிய சூழலை, சேர்ந்து வளரக்கூடிய சந்தோஷத்தை, புரிந்துகொள்ளக்கூடிய பக்குவத்தை என இவற்றுக்கான சாத்தியங்களை உருவாக்கித் தரும். அப்படி வளர்ந்து வரும் பிள்ளைகள், பின்னாளில் பணிச்சூழல், தொழில் சூழலிலும், மற்றும் குடும்ப அமைப்புகளிலும் தங்களுடன் பயணிக்கும் எதிர்பாலினரை, பாலினத்தைத் தாண்டி ஒரு சக உயிராக அணுகும் முன்னேற்ற சமுதாயத்தை நோக்கி நகர்வார்கள்.

பொதுவாக, பெண்கள் பள்ளி/கல்லூரி, ஆண்கள் பள்ளி/கல்லூரியில் படித்து பணிச்சூழலுக்கு வரும் மாணவர்கள் சிலரிடம் ஆண்களும் பெண்களும் இணைந்து பயணிப்பதில் தயக்கம், அச்சம், கற்பிதங்கள் காணப்படும். அதுவே, இருபாலர் கல்வி நிலையங்களில் படித்து வரும் மாணவர்களிடம், ஒப்பீட்டளவில் இந்தப் பாலின இடைவெளி குறைந்து போயிருக்கும். மேலும், தொழில், வேலை என அவர்கள் இணைந்து செயலாற்றும்போது, அந்த ஒருங்கிணைந்த உழைப்பு பணித்திறனிலும் வெளிப்பட்டு, சிறந்த மனிதவளக் குறியீடாக அமையும்.

ஆனால், ‘பெண் கல்வியை ஊக்குவிக்க’ என்று சொல்லி, பெண்களுக்குத் தனி வகுப்புகள் ஏற்படுத்துவது என்பது, மீண்டும் பெண்களை பொதுச் சமுதாயத்தில் இருந்து பிரித்து வைக்கும், அவர்களைப் பல்லாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும் போக்கு அன்றி வேறில்லை. பள்ளிகளில் பாலியல் கல்வியின் அவசியத்தைப் பற்றி வலியுறுத்திக்கொண்டிருக்கும் 21-ம் நூற்றாண்டில், பெண்களை ஆண் களின் கண்களில் படாமல் வைக்கும் பழஞ்சிந்தனையை, ‘திட்டம்’ என்று அரசு சொல்வதை எப்படி ஏற்பது?

நமக்குள்ளே...

உண்மையில் செய்ய வேண்டியது, பெண்களுக்குப் பாதுகாப்பானதாக உலகத்தை மாற்ற வேண்டியது தானே தவிர, பெண்களை உலகத்திடமிருந்து ஒளித்துவைப்பது அல்ல. பாலின சமத்துவம் என்பது, ஆணும் பெண்ணும் சமம் என்ற சூழலை உருவாக்குவது. கல்வி, வேலைவாய்ப்பு, குடும்ப வாழ்க்கை என வாழ்வின் எல்லா தளங்களிலும் அதற்கான சாத்தியங்களை உருவாக்கிக்கொடுப்பதே அரசின் கடமை.

டெல்லி அரசு, 2019-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தரவுகளின் அடிப்படையில், ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளியைவிட இருபாலர் படிக்கும் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டியது. அந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் இருபாலர் பள்ளிகள் 88.16%, பெண்கள் பள்ளிகள் 82%, ஆண்கள் பள்ளிகள் 74.8% தேர்ச்சி பெற்றிருக்க, ப்ளஸ் டூ தேர்வில் இருபாலர் பள்ளிகள் 98.03%, பெண்கள் பள்ளிகள் 97.42%, ஆண்கள் பள்ளிகள் 93.42% தேர்ச்சி பெற்றிருந்தன.

நம் மகள்களை பாலினத்தால் ஒளித்து வைக்காமல், மனிதர்களாக உருவாக்குவதே முன்னேற்றம் என்பதை அரசுக்கு உணர்த்துவோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism