Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

‘இது மாற்றத்துக்கான நேரம். அதை மேலும் மேலும் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்க முடியாது, பெண்களை இனியும் காக்க வைக்க முடியாது’

- கடந்த சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படுத்தியிருக்கும் உறுதியான

இந்த வார்த்தைகள், பெண்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை மேலும் பலமாக்கியிருக்கிறது.

கடற்படை, தரைப்படை, வான்படை என்று முப்படையை ஒருங்கிணைத்த உலகின் முதல் அகாடமியான நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு அகாடமியின் நுழைவுத் தேர்வை எழுத, இதுவரை ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்தப் பாலின பாரபட்ச நடைமுறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார் வழக்கறிஞர் குஷ் கல்ரா.

‘நாட்டின் ராணுவத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை கொடுப்பதில் உங்களுக்கு இருக்கும் சிந்தனைக் கோளாறு பிரச்னையை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று மத்திய அரசை நோக்கிக் கடுமையாகச் சாடிய நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு அகாடமியின் தேர்வில் பெண்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், ஆணாதிக்க மனோபாவத்தை மாற்றிக்கொள்ளாத மத்திய அரசு, அடுத்த ஆண்டு முதல் பெண்களையும் தேர்வில் இணைத்துக்கொள்வதாக சில தினங்களுக்கு முன் தன் கருத்தை முன்வைக்க, உஷ்ணமாகிவிட்டது உச்ச நீதிமன்றம். ‘இந்த ஆண்டே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்’ என்று உறுதிபட கூறிவிட்டது. இந்த வழக்கு தொடர்பான வாதங்களின்போது நீதிபதி எஸ்.கே.கௌல் தலைமையிலான அமர்வு முன்வைத்த வார்த்தைகள் ஒவ்வொன்றும், பெண்களுக்கு எதிராக நீடித்துவரும் தடைகளைத் தகர்த்து உடைத்தெறிந்த உளிகளே!

பெண்கள், தங்களுக்கான சம உரிமைகளை அடைய முடியாமல் தடுத்துக்கொண்டிருக்கும் தடைகள் அனைத்தும் இனி முழுமையாகத் தகர்க்கப்படும் என்கிற நம்பிக்கை அலைகளை இந்த அற்புதமான தீர்ப்பு மூலம் நாடு முழுக்கக் கடத்தியிருக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு, பெண் குலத்தின் சார்பில் நன்றிகள்.

குடியரசுத் தலைவர், பிரதம மந்திரி, 30-க்கும் மேற்பட்ட முதலமைச்சர்கள், 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான சட்டமன்ற உறுப்பினர்கள், பெண்கள் நலத்துறை அமைச்சர்கள் என்று மக்கள் பிரதிநிதிகள் நிறைந்திருக்கும் நம் நாட்டில், தனியொரு மனிதரான குஷ் கல்ராவின் பொதுநல வழக்குதான், 65 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட உரிமையைப் பெண்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது, நீதி தேவதையின் துணையோடு.

இன்னும் வந்து சேர வேண்டிய உரிமைகள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது 25 ஆண்டுகளாக இழுபறியில் கிடக்கிறது. ஆனால், இது சம உரிமை கேட்கும் காலம். தேவை, ஒதுக்கீடு அல்ல சம உரிமை. ஆம், 50 சதவிகித உரிமைதான் இனி பெண்களின் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும்.

ஆணாதிக்க மனோபாவத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்கள், உடனடியாக உணர்ந்து திருந்தட்டும். இல்லையேல், உச்ச நீதிமன்றத்தின் சுத்தியல் அந்த ஆணாதிக்க மனோபாவத்தையும் அடித்து நொறுக்கட்டும்!

உரிமையுடன்

ஸ்ரீ

ஆசிரியர்