Published:Updated:

நமக்குள்ளே

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

தலையங்கம்

டிக்டாக் வீடியோக்களால் பிரபலமான இளம் காதல் தம்பதி, மதுரையைச் சேர்ந்த உதயா - சுமதி. டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் என்று வீடியோக்கள் வெளியிட்டு, லட்சக்கணக்கான ரசிகர்களை இணைத்து வந்தனர். இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் சிக்கி சமீபத்தில் உதயா உயிரிழந்தார். கைக்குழந்தையுடன் நிலைகுலைந்து போனார் சுமதி. தன் மகன் உதயா இறந்த 10 மாதங்களில், தன் மருமகளுக்கு உதயாவின் அம்மா, சமீபத்தில் மறுமணம் செய்து வைத்துள்ளது, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மறுமணம் குறித்து உதயாவின் அம்மா, ‘ஆணின் துணை இல்லாமல், ஒரு பெண், குழந்தையுடன் இந்தச் சமூகத்தில் வாழ்வது எத்துணை துயரம் என்று உங்களில் பலருக்குத் தெரியும். எனவே, என் மருமகளை நான் இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்தேன். கைக்குழந்தையான என் பேரன் அப்பாவின் இன்மையை உணர ஆரம்பிப்பதற்குள், அவனுக்கு அப்பா கிடைக்க வேண்டும் என்பதால்தான், இந்தத் திருமணத்தில் அவசரம்’ என்று அவர் அளித்திருந்த விளக்கம், அழகு.

நமக்குள்ளே
நமக்குள்ளே

சுமதியின் மறுமணம் குறித்து சமூக வலைதளங்களில் அவரை சிலர் அவதூறு பேசினர். அதற்கான பதிலாகவே சுமதியின் மாமியார் பேசியிருந்தார். ஒரு மறுமணத்துக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு அந்தக் குடும்பத்தை நெருக்கும் இந்தச் சமூக அழுத்தம் ஒருபக்கம் என்றாலும், உண்மையில் அந்த மாமியாரின் வார்த்தைகள் மாற்றத்துக்கான விதைகளாகவே விழுந்துள்ளன. படிப்பறிவு பெற்ற, பொருளாதார பலம் பெற்ற குடும்பங்களிலேயே, தங்கள் பெண் களுக்கு மறுமண முடிவை எடுப்பதில் தடைகள் மிகுந்திருக்கும் சூழலில், மதுரை மாதிரியான ஒரு நாட்டுப்புற மாநகரத்தில் வாழும் இந்த எளிய குடும்பத்தின் உறுதியான இம்முடிவு, கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதானே தோழிகளே!

விவாகரத்து, கைவிட்டுச் சென்ற கணவர், கணவர் உயிரிழப்பு எனப் பல காரணங்களால் பாதியிலேயே வாழ்க்கை அச்சு முறிந்துபோகும் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு, மீண்டும் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதைப் பற்றி பல குடும்பங்களில் யோசிப்பதில்லை. அவள் விதி என்று, அந்தத் தனித்த வாழ்க்கையை அவள்மீது திணித்து, ஒரு புனிதப் போர்வையை அவளுக்குப் போர்த்திவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஒருவேளை அந்தப் பெண்ணுக்குக் குழந்தையும் இருந்துவிட்டால், இனி அந்தக் குழந்தைக்காக அவள் வாழ்ந்தால் போதும், அதை மீறிய வாழ்க்கை அவளுக்கு என்ன இருக்கிறது என்று தியாக பீடத்தில் அவளை ஏற்றிவிடுகின்றன குடும்பமும் சமூகமும். ஆனால், ஒற்றைப் பெற்றோராக ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பதில் உள்ள பொருளாதாரச் சுமை, சமூகச் சவால், மன அழுத்தங்கள், இன்னும் பிற பற்றியெல்லாம் இந்தியச் சமூக அமைப்பு நினைத்துப் பார்ப்பதே இல்லை. சுமதிகளின் மறுமணங்கள், இறுகிப்போயிருக்கும் அந்த அமைப்பை உடைக்கும் உளி.

மறுமணங்களுக்கான மனத்தடைகள் விலகட்டும்!

உரிமையுடன்

ஸ்ரீ...

ஆசிரியர்.