பிரீமியம் ஸ்டோரி

மாநிலத்தை அதிரவைத்திருக்கிறது, கோவையில் பள்ளிச் சிறுமி ஒருவர் ஆசிரியரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் குற்றவாளிகள் ஆசிரியர்கள், உறவினர்கள் என்று அவர்கள் வட்டத்துக்குட்பட்ட ஒரு நபராகவே இருப்பது அதிர்ச்சி என்றால், இன்னொருபக்கம் சமூகப் பாதுகாவலர்களான காவல்துறையும், ராணுவமுமே தங்கள் அதிகாரத்தால் பெண்களை பாலியல் பண்டமாக்கிச் சிதைப்பது அவலம்.

சமீபத்தில், மேற்கு வங்கத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பெண்களிடம் சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ உதயன் குஹா குற்றம்சாட்டியிருந்தார். ஒடுக்கப்பட்ட பெண்களின் உடல்களை தங்கள் பாலியல் உடைமையென காவலர்கள் சிதைத்த வழக்குகள் வரலாறு நெடுக உள்ளன. 1992-ம் ஆண்டு சந்தனக்கட்டை தேடுதல் வேட்டை என்ற பெயரில் தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி மலை கிராமத்தில் புகுந்த காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறையினர்

18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத்தை மறக்க முடியுமா? 2004-ம் ஆண்டு மணிப்பூரில் 12 தாய்மார்கள் இந்திய ராணுவத்தின் அலுவலகம் முன்னர் ‘Indian Army Raped Us’ என்ற வாசகத்துடன் நடத்திய நிர்வாணப் போராட்டம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

National Campaign Against Torture (NCAT) என்ற அமைப்பு, 2000 - 2020 காலகட்டம் வரை மத்திய ஆயுதப்படையால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்த வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற 11 மாநிலங்களில், அஸ்ஸாம் முதலாவதாக உள்ளது. இவ்வறிக்கையில் உள்ள 114 வழக்குகள், 224 பெண்கள் என்பது பதிவுக்கு வந்த கணக்கு மட்டுமே. வராதவை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

நமக்குள்ளே...

தேடுதல், விசாரணை, எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில், சில காவல் ஓநாய்களே குரலற்ற பெண்களை பாலியல் கொடுமை செய்யும் கொடூரத்துக்குத் தீர்வு எப்போது?

`மத்திய அரசின் அனுமதியின்றி விசாரணை செய்யக் கூடாது’ என்று ராணுவ வீரர்களைப் பாதுகாக்கும் சட்டம் திருத்தப்படுவது எப்போது?

நாட்டுக்குள் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கே நீதி தூரமாகக் கிடக்கும்போது, பொதுச் சமூகப் பார்வையிலிருந்து விலகிக்கிடக்கும் பழங்குடியினப் பெண்களை, எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில் தொடர்ந்து சிதைத்து வருவதை கண்டிக்கும் குரல்களை எழுப்ப வேண்டியதும் நம் கடமையல்லவா தோழிகளே?!

அரசர் காலம், ஆங்கிலேயர் காலம் தொடங்கி இப்போதுவரை அதிகாரம் பெண்களை இரையாக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளியே இல்லை. ஒருபக்கம் பிறந்த பச்சிளம் குழந்தையில் இருந்து மூதாட்டி வரை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இன்னொருபக்கம் ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், மருத்துவர்கள், முதலாளிகள், காவல்துறையினர், ராணுவத்தினர் என அனைத்துத் தளங்களிலும் பாலியல் குற்றவாளிகள் இருக்கவே செய்கிறார்கள். இப்படியான ஒரு சமூகத்தில் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான நம் கூட்டுக் குரல்களை அதிகரித்துக்கொண்டே இருப்போம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு