Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

தலையங்கம்

பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்றும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் இருக்கும் திருமண வயது வரம்பு, இனி இருபாலினருக்குமே 21 வயது என்றாகும்.

குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், இளவயது கர்ப்பங்கள், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு, அதைத் தொடர்ந்து பிரசவ தாய் - சேய் மரணங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும், பெண்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் திருமணத்தால் தடைபடாமல் இருக்கவும், திருமண வயதில் ஆண் - பெண் சமத்துவத்தை முன்னிறுத்தியும் பெண்ணின் திருமண வயதை அதிகரிக்கும் முடிவை எடுக்கிறது அரசு. இதற்காக, துறைசார் நிபுணர்களிடமும், நாடெங்கிலும் 16 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களிடமும் கருத்துக் கேட்டதாகவும் கூறியிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு குடும்பத்திலும் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் இந்தச் சட்டம் குறித்து, மக்களிடம் ஏன் கருத்துக் கேட்கவில்லை அரசு?

பெண்ணின் திருமண வயது 18 என்று இருக்கும்போதே இங்கு குழந்தைத் திருமணங்களை முழுமையாகக் களைய முடியாத நிலையில், 21 வயது என்ற முடிவு, சட்டத்துக்குப் புறம்பான திருமணங் களை இன்னும் அதிகரிக்கும்; ஏழை மற்றும் பழங்குடியினப் பெற்றோர்களைக் குற்றவாளிகள் ஆக்கும். இந்தியாவில் பாலியல் இசைவு வயதை 18-ல் இருந்து 16 ஆக்குவதற்கான ஆலோசனைகள் மேலெழும்பிக்கொண்டிருக்கும் காலத்தில், திருமண வயதை 21 ஆக்குவதில் உள்ள பாலியல் சிக்கல்கள் பற்றியும் பேசுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள். மேலும், சாதி அமைப்புக்கு எதிரான முக்கியக் கருவியாகக் காதல் திருமணங்கள் இருக்கும் நம் சமுதாயத்தில், பெண்ணின் திருமணம் 21 வயது வரை தள்ளிப் போவது, அவர் மீதான பெற்றோரின் கட்டுப்பாட்டை நீட்டிப்பு செய்யும்; ஒரு வகையில் அது காதல் திருமணங்களை சட்டரீதியாக ஒடுக்கும்.

vikatan
vikatan

திருமண வயது 21 வயது வரை நீட்டிக்கப்படுவதில் கல்வி முதல் உடல்நல மேம்பாடு வரை அரசு முன்வைக்கும் அனைத்து பெண் முன்னேற்றக்கூறுகளும் அடங்கியுள்ளன என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், அதைச் சட்டம் கொண்டு கட்டாயம் ஆக்கலாமா?

மத்திய அரசின் சாம்பிள் ரெஜிஸ்ட்ரேஷன் அமைப்பின் (Sample Registration System - SRS) கடந்த வருடங்களின் ஆய்வறிக்கை, இந்தியாவில் ஆண், பெண்ணின் திருமண வயது உயர்ந்துகொண்டே வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, கல்வி அறிவு அதிகமுள்ள கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பெண்ணின் திருமண வயது சராசரியாக 21 வயதாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இது சட்டத்தால் நிகழ்ந்த மாற்றமல்ல. பெண் பிள்ளைகளுக்கான கல்வி, அதை அடைவதற்கான போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அவர்களுக்குக் கிடைக்கப்பெற செயல்படுத்தப்பட்ட அரசுத் திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிதானே தோழிகளே?!

சட்டங்களால் ஒருபோதும் சாதிக்க முடியாததை, கல்வி சாதித்திருக்கிறது. ஆக, இந்தியாவின் அனைத்து மாநிலப் பெண்களுக்கும் முதலில் போதிக்க வேண்டியது கல்வியைத்தான் என்பதை மத்திய அரசு இப்போதாவது உணரட்டும். இதன்மூலமாக, ‘முடிவெடுக்கும் அதிகாரம் பெண்களுடையதே’ என்பதை உறுதி செய்யட்டும்!

உரிமையுடன்,

ஸ்ரீ...

ஆசிரியர்