Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியைச் (Pre-university College) சேர்ந்த 8 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்புக்குள் அனுமதிக்கப்படவில்லை. அம்மாணவிகள், ஹிஜாப் அணிவது தங்களது தனிப்பட்ட உரிமை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படியும் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காததால், மாணவிகளில் ஒருவர், இந்த ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தொடர்ந்து, கர்நாடகாவின் சில கல்லூரி மாணவ, மாணவிகள் ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராகக் காவித்துண்டு அணிந்து வகுப்புக்கு வந்தது, மண்டியா மாவட்டத்தில் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை மாணவர்கள் கும்பல் குறிவைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம்போட, பதிலுக்கு அவர் ‘அல்லாஹு அக்பர்’ என்று முழங்கியது, ஷிமோகா மாவட்டத்தில் ஒரு பள்ளியில் தேசியக் கொடியேற்றும் கம்பத்தில் மாணவர்கள் காவிக்கொடியை ஏற்றியது, இதுபோன்ற கலவரச் சூழல்கள் உண்டானதால் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது என... பதற்றமும் பரபரப்புமானது களம்.

இதற்கிடையில் கர்நாடக உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் மீதான விசாரணை முடியும்வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மத அடையாள ஆடைகளை மாணவர்கள் அணிந்துவர இடைக்கால தடை விதித்தது. மேலும், அனுமதி மறுக்கப்பட்ட மாணவி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை காத்திருக்கும்படி கூறியுள்ளது.

ஒரு கல்லூரியில் ஆரம்பித்த பிரச்னை, இன்று அகில இந்திய பிரச்னையாகியுள்ளது. பொதுவாகவே, பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இங்கு மளமளவென்று பற்றிக்கொண்டு எரியும். அத்துடன் இதில் மதமும் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்தியாவே உற்றுநோக்கும் பிரச்னை ஆகியிருக்கிறது.

பொதுவாக, ஒவ்வொரு மதக்குழு, இனக்குழுவுக்கும் ஓர் ஆடை, அலங்கார வரையறை உள்ளது. வட இந்தியப் பெண்களின் முக்காடு, சீக்கியர்களின் தலைப்பாகை, பாதிரியார்களின் அங்கியில் தொடங்கி பொட்டு, தாலி வரை அவரவர்களும் தங்கள் மதம் சார்ந்த தோற்றத்தைப் பின்பற்றுகிறார்கள். இதை அனுமதிப்பதுதான் இந்தியாவின் ஜனநாயகத்தன்மை.

இன்னொரு பக்கம், கல்வி நிலையங்களில் மத அடையாளங்களைத் தவிர்ப்பதை அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் ஒரே சீராகச் செயல்படுத்த வேண்டும் என்பது அவசியம். மாணவர்கள் கட்டிக்கொள்ளும் வண்ண வண்ண சாதிக்கயிறுகள் முதல் அசைவ உணவுகள் அனுமதிக்கப்படாத வழக்கம், பள்ளிக் கழிவறைகளை ஒடுக்கப்பட்ட மாணவர்களைச் சுத்தம் செய்ய வைக்கும் அவலம் வரை பள்ளி, கல்லூரி வளாகங்களுக்குள் மதம், சாதி அடிப்படையிலான அனைத்து அதிகாரங்களும் சலுகைகளும் களையப்பட்டு, மாணவர்களை மதத்துக்கு அப்பாற்பட்ட மனிதவள சக்தியாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு கல்வி நிலையங்களுக்கு உள்ளது.

நமக்குள்ளே...

கர்நாடகாவில், மதம் காரணமாக மாணவ சமுதாயம் பிரிந்து நிற்பது பதறவைக்கிறது.

பள்ளி, கல்லூரிகளின் வரையறைகளும் கட்டுப்பாடுகளும், மாணவர்களுக்கு இடையில் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை வளர்த்தெடுக்கும்படி அமைய வேண்டியது அவசியம். பெற்றோர்களாக, கல்வி நிலையங்களுக்கு நாம் அதையே வலியுறுத்துவோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்.