Published:Updated:

மத்திய, மாநில அரசுகளே... மோசடிகளுக்குத் துணைபோகாதீர்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

மத்திய, மாநில அரசுகளே... மோசடிகளுக்குத் துணைபோகாதீர்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். கரூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்தில் நஷ்டம் அடைந்து, தற்கொலை செய்து கொள்ளும்முன் பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் கந்துவட்டி தருபவர்களிடம் கடன் வாங்கி, அதைத் திரும்பக் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இப்படிப் பல செய்திகள் தினமும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்ப்பது வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது.

கந்து வட்டிக்காரர்கள் ஆதிக்கம் அதிகரித்து, அதனால் கடும் பாதிப்புகள் உருவாவதைத் தொடர்ந்து, அவர்களின் கொட்டத்தை அடக்க ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்கிற பெயரில் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்துக் காவல் நிலைய கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார் தமிழகத்தின் டி.ஜி.பி சைலேந்திரபாபு. ஆன்லைன் சூதாட்டத்தின் செயல்பாட்டை நிறுத்த அவசரச் சட்டம் கொண்டுவரப் போவதாக அமைச்சர் சொல்லியிருக்கிறார்.

ஆன்லைன் நிறுவனங்களாகட்டும், கந்து வட்டிக்காரர்களாகட்டும் அல்லது மோசடி நிதி நிறுவனங்களாகட்டும்... அனைத்துமே மத்திய, மாநில அரசுகளின் கண்முன்பாகத்தான் மோசடியை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியில் முறைப்படி பதிவு செய்யாமல், கடன் வழங்குவதாக மத்திய ரிசர்வ் வங்கியே சொல்கிறது. ஆக, பட்டவர்த்தனமாகத்தான் இந்த மோசடித் தொழில் நடந்துகொண்டிருக்கிறது. அரசு அமைப்புகளே இதற்குத் துணை போய்க்கொண்டிருக்கின்றன. அதேசமயம், ‘மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று அறிக்கையும் விடுகின்றன. இது, ‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதாக’ இருக்கிறது.

பொருளாதாரக் குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்கிற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்மையிலேயே இருக்கிறது எனில், இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் தொடர்பாகப் புகார் செய்ய 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ‘ஹெல்ப்லைன்’ ஒன்று உருவாக்கி செயல்படுத்தப்பட வேண்டும். இந்த ‘ஹெல்ப் லைன்’ குறித்த செய்தியைப் பரவலாக விளம்பரம் செய்து, அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான புகார்களை அளிப்பதுடன், 24% - 36% வட்டிக்குக் கடன் வாங்கலாமா, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் என்ன ஆபத்து என்பதையெல்லாம் மக்கள் கேட்டுத் தெரிந்துகொள்கிற வசதியையும் இந்த ‘ஹெல்ப் லைன்’ மூலம் தர வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கந்துவட்டி அல்லது மோசடி நிறுவனங்களிடம் சிக்காமல் இருக்க, மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கேட்டவுடன் கிடைக்கிறது என்பதற்காகக் கடன் வாங்கிவிட்டு, பிற்பாடு அதைத் திரும்பக் கட்ட முடியாதபோது கூப்பாடு போட்டுப் பயனில்லை என்பதை உணரவேண்டும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism