Published:Updated:

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாதீர்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாதீர்கள்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதன் காரணமாக சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 103 டாலரைத் தொட்டிருக்கிறது. இந்த விலையேற்றம் இன்னும் கணிசமாக அதிகரிக்கும் என்கிற கணிப்பும் நம்மை பயமுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், நம் நாட்டில் கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமலே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை இனி உயர்த்தப்படுமோ என்கிற அச்சம் எழுந்து, சாதாரண மக்களை பதற வைக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாறுவதற்கேற்ப நம் நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும். ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் (குறைக்கவும் படாமல்) ஒரே நிலையில் இருந்து வருகிறது. அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.40 ரூபாயாகவும் ஒரு லிட்டர் டீசல் 91.43 ரூபாயாகவும் இருந்து வருகிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியபோதே, நாடு முழுக்க மக்களின் கோபம், மத்திய அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பியது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைத்திருப்பது ஊரறிந்த ரகசியமே!

ஐந்து மாநிலத் தேர்தல் முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கக் கூடாது என்பதே மக்களின் தீர்மானமான எண்ணம்.

காரணம், கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 - ரூ.8 வரை உயர்த்தும்பட்சத்தில், அத்தியாவசியமான பொருள்களின் விலை உயரும். இதனால் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தைச் செலவு செய்ய வேண்டியிருக்கும். மக்கள் அதிகப்படியான செலவைத் தடுக்க ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தை உயர்த்தும். இதனால் கடன்களுக்கான வட்டி விகிதமும் உயரும். இது தொழில் நிறுவனங்களைப் பாதித்து, வருமானத்தைக் குறைக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும்.

ஏற்கெனவே வந்த மூன்று அலை கொரோனா நோய்த்தொற்றால் மக்களும், தொழில் நிறுவனங்களும் மிகவும் பாதிப்படைந்து, இப்போதுதான் அதிலிருந்து கொஞ்சம் மீண்டுவரத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தி, மக்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் பெரும் தவற்றை மத்திய அரசாங்கம் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்குப் பதிலாக வேறெந்த வழிகளில் எல்லாம் சமாளிக்க முடியும் என்பதை மத்திய அரசாங்கம் யோசிக்க வேண்டும். இந்த அணுகுமுறைதான் மக்கள் கஷ்டப்படுவதில் இருந்து காப்பாற்றும்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism